தமிழகத்திலேயே பொது சாலையில் பேருந்து நிலையம் என்ற அவல நிலையை மாற்றி திருச்சி சத்திரம் பேருந்து நிலைய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா ? வழக்கறிஞர் கிஷோர் குமார் .
திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளரும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொருளாளருமான கிஷோர் குமார் பொதுமக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கால நேரமின்றி தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சத்திரம் பேருந்து நிலையம்.
பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் ஏற்படுத்த பட்டாகிவிட்டது இனி திருச்சி திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் தீர்வாகிவிட்டது என பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியவில்லை. காரணம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தினம்தோறும் நேர காலமின்றி காவிரி பாலம் வரை நீளும் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிக்கி திணறவேண்டியுள்ளது.
திருச்சி மாநகர காவல்துறையில் இதற்கு முன்பு போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவிற்கு என தனி துணை ஆணையர் நியமிக்கப்பட்டு மாநகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது திருச்சி மாநகர காவல் எல்லை வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாநகர போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய காவல்துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதி பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் அடத்தியான பகுதி. இதன் காரணமாக தினம்தோறும் பல்லாயிரகணக்கான கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் இப்பகுதியை கடந்தே தங்களது தேவையை பூர்த்திசெய்து வருகிறார்கள்.
மேலும் பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறந்த பிறகும் துறையூர், முசிறி, பெரம்பலூர், அரியலூர், கரூர், குளித்தலை உள்ளிட்ட பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலைய காமராஜர் சிலை சாலை மூன்று புறத்திலும் சாலைகளை ஆக்கிரமித்து மணிகணக்கில் நிற்பதால் அப்பகுதியில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டு அவர்களை மீட்டு வரும் ஆம்புலன்ஸ்கள் காவிரி பாலம் வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் நகருக்குள் வரவே காலதாமதமாகிறது. மேலும் தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் நெரிசல் அதிகரிக்கிறது.
திருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களும் மேற்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரும் முயற்சி எடுத்தும், நெரிசலை தவிர்க்க திட்டமிட்ட வரையறையில்லாததால் சாத்தியபடுத்த முடியவில்லை என்பது வேதனை.
எனவே தமிழகத்திலேயே பொது சாலையில் பேருந்து நிலையம் என்ற அவலநிலையை மாற்றி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்திலேயே துறையூர், முசிறி, பெரம்பலூர், அரியலூர் பேருந்துகளுக்கு இடம் ஒதுக்கியும், சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகளை முறைபடுத்தி சத்திரம் பேருந்து நிலையத்தில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு திருச்சி மாநகராட்சியும், மாநகர காவல்துறையும் இணைந்து நேரடி களஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என ,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .