Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

4 ஆண்டில் செய்ய முடியாததை இன்னும் 7 மாதத்தில் செய்ய முடியுமா? ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற நாடகமாடும் திமுக . திருச்சி மேற்கு தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி .

0

'- Advertisement -

திமுக குடும்பக் கட்சி, அதிமுக மக்களுக்கான கட்சி :

தமிழகம் போதை மாநிலமாக உருவாகிவிட்டது :

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது

திருச்சி புத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணப்பாறை தொகுதியில் மக்களை சந்தித்துவிட்டு, அடுத்ததாக திருச்சிமாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி புத்தூர் பிஷப் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:-

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விவசாயிகளுக்குத் துன்பம் விளைவிக்கும் திட்டத்தைதான் கொண்டுவருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் 20 கிணறுகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். சியா கமிட்டி அனுமதி அளித்துள்ளது. ஆனால் அமைச்சர்கள் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள், தெரியாமல் அரசாங்கம் நடக்குமா? இது சென்சிட்டிவான பிரச்னை.

ஏற்கனவே டெல்டாவில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்ட அரசு திமுக அரசு. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனைத் தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள், ரத்து செய்வதற்கு அதிகாரம் இருக்கிறது என்றால், அனுமதி கொடுப்பதற்கும் அதிகாரம் இருக்கத்தானே செய்யும். இந்த அரசுக்குத் தெரிந்துதான் அனுமதி கொடுத்திருக்கிறது, இது விவசாயிகளின் விரோத அரசு.

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டனர். உடல் உபாதை ஏற்படுகிறது என்று சொல்லியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால் 3 இறந்திருக்கிறார்கள், 50 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?

திமுகவில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார், சுகாதாரத்துறையை கவனிப்பதில்லை. மாரத்தான் ஓட்டமே ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். அரசு மருத்துவமனையைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் சொன்னால் தவறு.

திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை தீக்கதிரில் 11-07-2025 அன்று ஒரு செய்தி வெளியானது. திருச்சி மாநகரில் உள்ள மருத்துவமனை பற்றி மிகவும் கேவலமாக எழுதியிருக்கிறார்கள். நாம் சொன்னால் எடப்பாடி பழனிசாமி பஸ்ஸைத் தூக்கிக்கொண்டு ஊர்,ஊராகச் சென்று பொய் பேசிவருகிறார் என்று முதல்வர் சொல்கிறார், அமைச்சர்கள் சொல்கிறார்கள்.

தீக்கதிரில் வந்த செய்தியைச் சொல்கிறேன், திருச்சி மருத்துவமனையின் அவலம், அதிமுக ஆட்சியில் தலைசிறந்த மருத்துவமனையாக இருந்தது. தற்போது கடும் அவலத்தில் உள்ளது. செவிலியர், மருத்துவர், மருந்துகள் பற்றாக்குறை, கழிவுநீர் குப்பை சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுகிறது, அதனால் மக்கள் நிம்மதியாக சிகிச்சை பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி, எலி, பெருச்சாளி எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறுநீரக நோய், அறுவை சிகிச்சை, புற்றுநோய், கதிரியக்க சிகிச்சை, மனநல சிகிச்சை என இங்கு எதுவுமே இல்லை. மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தால் 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை லஞ்சம் கேட்கிறார்கள். அசுத்தமான உணவு தயாரிக்கும் உணவுக்கூடம். அறுவை சிகிச்சை, ஸ்கேன் பரிசோதனை செய்யாமல் நோயாளிகளை பல நாட்கள் அலைக்கழித்து மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்குகிறார்கள். இதனை திமுக கூட்டணி கட்சி பத்திரிகை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விடுகிறது. போதைப் பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் தமிழகம் போதை மாநிலமாக உருவாகிவிட்டது. போதை ஆசாமிகளால் கொலை கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினமும் தங்கம் விலை நிலவரம் பார்ப்பதுபோல, இப்போது கொலை நிலவரம் பார்க்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். இதனால் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 77 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி 72 ரூபாய், இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ 48 ரூபாய், கடலெண்ணை 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ 400 ரூபாய், து.பருப்பு ஒரு கிலோ 130 ரூபாய், உ.பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய் என எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளானர். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.

கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஒரு யூனிட் எம்.சாண்ட் 5500 ரூபாய், ஒரு யூனிட் ஜல்லி 4500 ரூபாய், ஒரு டன் கம்பி 70 ஆயிரம் ரூபாய், ஒரு செங்கல் 10 முதல் 12 ரூபாய், சிமெண்ட் 350 ரூபாய், மரம் 200% உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இரவில், கனவில் வேண்டுமானால் வீடுகட்டலாம்.

இப்போது கிரஷர் உரிமையாளர்களிடம் டன்னுக்கு 100 ரூபாய் கேட்பதாக தகவல், இது சரியல்ல, மீண்டும் விலை உயர்வு ஏற்படும். நான் பல கூட்டங்களில் சொல்லியும் இன்னமும் இந்த உத்தரவு திரும்பப்பெறவில்லை, கிரஷர் உரிமையாளர்களை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக அரசு அமைந்ததும் இதற்கு தனியாக விசாரணை செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மாநகராட்சி பகுதி, அதிமுக ஆட்சியில் வீடு, கடை கட்ட வேண்டும் என்றால் ஆயிரம் சதுரடிக்கு பிளான் அப்ரூவல் 37,800 ரூபாய் கட்டினால் போதும். ஆனால் திமுக ஆட்சியில் 88 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்கிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, பெட்ரோ டீசல் விலை குறைக்கப்படும் என்றனர், குறைக்கவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. ரேஷனில் சர்க்கரை ஒரு கிலோ கூடுதலாகக் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை.

மாணவர்கள் பெற்ற கல்வி கடன் ரத்துசெய்யப்படும் என்றனர், ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி.. தயவுசெய்து இப்போதாவது அந்த ரகசியத்தைச் சொல்லுங்கள். இவர்களுடைய பேச்சைக் கேட்டு, நம்பி 25 மாணவர்கள் இறந்துவிட்டனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுகவே ஏற்க வேண்டும்.

ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் முதல்வர் என்று ரகுபதி சொல்கிறார். முதல்வர் பதவி என்ன கடையிலா கிடைக்கிறது? ரகுபதி அவர்களே… மக்கள் ஓட்டு போட்டுத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஒன்று, நீங்கள் வெளிப்படையாக சொல்லிவிட்டீர்கள். ஸ்டாலின் முதலமைச்சர் அல்ல,உதயநிதி தான் முதலமைச்சர் என்று கூறிவிட்டீர்கள். ஆனால், அடுத்தாண்டு அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அட்சி அமைக்கும். கருணாநிதி குடும்பத்தினர் எவரும் ஆட்சிக்கு வர முடியாது. அந்த குடும்பத்தில் காக்கா பிடித்தால்தான் பதவி தொடரும் இல்லையெனில் பதவி பறிக்கப்படும். உழைப்பிற்கெல்லாம் அங்கு மரியாதை இல்லை. திமுக குடும்பக் கட்சி, அதிமுக மக்களுக்கான கட்சி.

அதிமுக ஆட்சியின் பல திட்டங்களை திமுகவினர் ரத்து செய்துவிட்டனர்,

நிறுத்தப்பட்ட அத்தனை திட்டங்களும் அடுத்து தொடரும். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார். முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். 46 பிரச்னையை நான்காண்டில் தீர்த்தால் மகிழ்ச்சி, ஆனால் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். நான்காண்டு செய்ய முடியாததை இன்னும் 7 மாதத்தில் செய்ய முடியுமா? ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் அட்சிக்கு வர இப்படி விளம்பரம் செய்கிறார்கள்.

திருச்சி மாநகரில் ஆயிரம் கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல நடவடிக்கைகள் எடுத்தோம். 16 பூங்காக்கள் உருவாக்கினோம், 5 போக்குவரத்துத் திட்டு அழகுப்படுத்தும் பணி, வெள்ளப் பாதிப்பை தடுக்க உய்யக்கொண்டான் கால்வாய் 18 கோடி ரூபாயில் கரைகள் மேம்பாடு செய்யப்பட்டது. மாநகர் முழுவதும் எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்பட்டது, தில்லை நகரில் வணிக வளாகம் கட்டப்பட்டது,

பஞ்சப்பூரில் 14 கோடி மதிப்பில் தரைமட்ட சூரிய ஒளி மின் நிலையம், புத்தூர் தினசரி சந்தை 20 கோடியில் மேம்படுத்தப்பட்டது. இவ்வளவும் அதிமுக ஆட்சியில் செய்துகொடுத்திருக்கிறோம்.

இப்போது பல கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அய்யப்பன் கோயில் பின்புறத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை முதல் அல்லிக்கரை சுண்ணாம்புக்காரன் வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள், வயலூர் சாலைக்கு மாற்றுப்பாதை கேட்டிருக்கிறீர்கள், குடமுருட்டி கோணக்கரை ரயில்வே கேட்டினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், இங்கு ரயில்வே மேம்பாலம் வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி மேம்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள், உறையூரில் இருந்து குழுமணி இணைக்கும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள்,

திருச்சி அரசு மருத்துவமனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள், மரக்கடை வியாபாரிகளுக்கு தனி இடம் கேட்டிருக்கிறீர்கள். இவை அனைத்தும் செய்துகொடுக்கப்படும்.

நடைபாதை வியாரிகளுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படுவதோடு, அவர்களுக்கு நிதியுதவியும் அளிக்கப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களது சங்கத்தில் உறுப்பினராகப் பதிவுபெற்றவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

இந்தப் பகுதி சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் சரிவடைந்ததாகச் சொன்னார்கள், இங்கு தொழில் வளர்ச்சி பெற வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தோம். திருச்சியில் ராணுவத் தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பாரத பிரதமர் அறிவித்தார். அதை மீண்டும் வலியுறுத்தி, இங்கு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” .

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

பரப்புரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன், ஏலக்காய் மாலை அணிவித்து, வெள்ளி வேல், பளிங்கு கல்லால் செதுக்கப்பட்ட மலைக்கோட்டை சிற்பம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

 இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன்,அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன்,

மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் வனிதா, பத்மநாதன்,, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலாஜி,

 அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் சிந்தை முத்துக்குமார் ,அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஞானசேகர், 39 ஏ வட்ட செயலாளர் வசந்தம் செல்வமணி ,வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , கலைப்பிரிவு மாவட்ட துணை செயலாளர் எம் பி வி ,ஆனந்தன் ,,

 எடத்தெரு எம் கே குமார் ,  மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர் மலர்விழி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலராமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வக்கீல் முத்துமாரி,

வழக்கறிஞர் அணி இணை செயலாளர் வழக்கறிஞர்கள் எட்வின் ஜெயக்குமார், கங்கை செல்வன்,மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கருமண்டபம் சுரேந்தர்,,வட்டச் செயலாளர் செல்லப்பா,

,எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டி ஆர்.சுரேஷ்குமார்,ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கங்கை மணி, வழக்கறிஞர்கள் சேது மாதவன் , கௌசல்யா, ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை எஸ் எம் டி மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.