தாழ்ந்த ஜாதிகாரனை ஏன் திருமணம் செய்தாய் . என்னுடன் உல்லாசமாக இருந்தால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன் என 3 குழந்தைகளின் தாயிடம் கூறிய எஸ்ஐ .
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி டிரைவர்.இவரது மனைவி கிருத்திகா (வயது 35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் வயல்கள் அருகருகே உள்ளது. இருவருக்கும் கிணற்றிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் தேதி கிருத்திகா கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய போது அங்கு வந்த ஜோதிவேல், அவரிடம் வாக்குவாதம் செய்து தாக்கினார். இதில் காயமடைந்த கிருத்திகா, துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேசமயம் ஜோதிவேல், சிவக்குமார் தம்பதி மீது துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணைக்கு வருமாறு துறையூர் எஸ்ஐ சஞ்சீவி, கிருத்திகாவை காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற கிருத்திகாவிடம், உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ எனது ஆசைக்கிணங்க வேண்டும். இல்லை என்றால் உன் மனுவை விசாரிக்காமல் அலைக்கழிப்பேன் என காவல் நிலையத்திலேயே எஸ்ஐ கூறியதாக தெரிகிறது.
இதில் அதிர்ச்சியடைந்த கிருத்திகா, அங்கிருந்து அழுதபடியே வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த பெண் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், போலீஸ் நிலையத்துக்கு சென்ற என்னிடம் புகார் சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் விசாரித்தார். பின்னர் என்னிடம், `நீ உனது கணவரை காதல் திருமணம் செய்து 3 குழந்தைகள் பெற்றுள்ளாய். நீ உயர்ந்த சாதி தானே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க, உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எனது ஆசைக்கிணங்க வேண்டும். இல்லையென்றால், உன் மனுவை விசாரிக்காமல் காலதாமதப்படுத்தி அலைக்கழிப்பேன்’ என்று கூறினார்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், “இதை நான் அழுதபடி வீட்டுக்கு வந்து, வெளிமாநிலத்தில் லாரி ஓட்டும் கணவரிடம் மொபைல் போன் மூலம் கூறினேன்” எனவும் கூறியுள்ளார். சுமார் 2 நிமிடங்கள் பேசும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சம்பவம் குறித்து உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.