திராவிட லுங்கி. கைலி கட்டி, கையில் பேண்ட்ஜுடன் அரசாங்கத்தையே நடத்துவோம். ஸ்டாலின் படத்துடன் வைரலாகும் பதிவு
தமிழக முதல்வர் ஸ்டாலின் லுங்கி அணிந்தபடி பணியாற்றும் புகைப்படம் வெளியான நிலையில், எழுத்தாளர் மதிமாறன், “திராவிட லுங்கி” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். தினந்தோறும் தலைமைச் செயலகம், அறிவாலயம், வெளி மாவட்ட சுற்றுப் பயணம் என சுற்றிச் சுழன்றுக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் அடுத்த சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாலும் மக்கள் நலத் திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என இன்று மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதல்வரின் தனிச் செயலாளர் உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகளோடு மருத்துவமனையில் அமர்ந்தபடி காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.
கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மக்களுடன் நேரடியாக உரையாடினார். இந்த ஆய்வின் போது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பங்கேற்ற பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து கலந்துரையாடினார்.
இதுதொடர்பான முதல்வரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. குளுக்கோஸ் உள்ளிட்டவற்றை ஏற்ற உதவியாக கையில் போடப்பட்டிருக்கும் வென்ஃப்லான் பேண்டேஜூடன் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவரது கையில் அந்த ஊசி போட்ட இடத்தில் வீக்கம் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்து இடுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்திருப்பார், சில நேரங்களில் வெள்ளை சட்டையும் பேண்ட்டும் அவர் அணிந்திருப்பார். வீட்டில் ஓய்வில் இருக்கும்போது லுங்கி அணிந்திருப்பார். மருத்துவமனையில் இருக்கும் முதல்வரின் புகைப்படத்தில் கைலி, கட்டம் போட்ட சட்டை, தோளில் துண்டுடன் முதல்வர் காட்சி அளிக்கிறார்.
இந்நிலையில், மருத்துவமனையில் லுங்கி அணிந்தபடி, முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணிகளில் ஈடுபடும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘திராவிட லுங்கி’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் மதிமாறன். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மதிமாறன் வெளியிட்டுள்ள பதிவில், “ஆரியத்திற்கு லுங்கி மீது எப்போதுமே தீண்டாமை. அதை அணிபவர்கள் மீதும் வெறுப்பு. ஆனால், ஓய்வு நேரத்தில் வீட்டில் மட்டுமல்ல, மருத்துவமனையிலேயே லுங்கி கட்டி தான் அரசாங்கத்தையே நடத்துவோம். பெரியார்+கலைஞர்+தளபதி = திராவிட லுங்கி ” எனத் தெரிவித்துள்ளார்.