திருச்சி : பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ. மூன்று கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் .
இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக கஞ்சா இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் கடத்தல்காரர்களை சுங்க வரித் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த ஸ்கூட் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து, விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் உடைமைகளில், 3 கிலோ எடை கொண்ட, ரூ.3 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். தொடர்ந்து போதைப் பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட தம்பதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.