தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை காலால் எட்டி மிதித்து உடைத்த வார்டு செயலாளர் உட்பட 4 திமுகவினர் கைது .காரணம்….
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து உடைத்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனையை போலீசார் தடுத்ததால் கோபமடைந்த திமுக நிர்வாகி தனது கடை ஊழியரை வைத்து முதல்வரின் புகைப்படத்தை உடைத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 14-வது வார்டு செயலாளர் தக்காளி விஸ்வநாதன். இவர் நீண்ட காலமாக திமுகவில் இருந்து வருகிறார். இவரது மகள் தீபா 14வது வார்டு திமுக கவுன்சிலராக செயல்பட்டு வருகிறார்..
தக்காளி விஸ்வநாதன் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வந்த நிலையில் அவரது கடையில் உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வநாதன் தக்காளி வியாபாரம் செய்யும் கடையில் கள்ள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் கள்ள லாட்டரி விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து மீண்டும் கள்ள லாட்டரி விற்பனை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக திமுகவை சேர்ந்த சில நிர்வாகிகள் தனக்கு சப்போர்ட்டுக்காக வரவில்லை என்று கடுப்பான தக்காளி விஸ்வநாதன் தனது கடை ஊழியரிடம் சிஎம் ஸ்டாலின் புகைப்படத்தை கடையின் வெளியே வைத்து உடைக்கச் சொல்லி உள்ளார். தொடர்ந்து அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை காலால் உதைத்து உடைத்த திமுகவைச் சார்ந்த அலெக்ஸ் என்ற இளைஞரும் புகைப்படத்தை உடைக்க சொல்லி தூண்டிய குமாரபாளையம் திமுக வார்டு செயலாளர் தக்காளி விஸ்வநாதன் உட்பட நான்கு நபரை குமராபாளையம் போலீசார் தற்போது கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை திமுகவினரை உடைத்த சம்பவம் தற்போது பேசு பொருளாக உள்ள நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தற்போது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.