திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் சீரியல் செட் பிரிக்கும்போது தவறி விழுந்த ஊழியா் பரிதாப பலி.
திருச்சி திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் மின் பதாகையைப் பிரிக்கும்போது தவறி விழுந்த தனியாா் மின் ஊழியா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவெறும்பூா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்ற விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த விழாவில் திமுகவினரை வரவேற்று வண்ண விளக்குகள், தோரணங்கள், திமுக தலைவா் உருவம் பதித்த சீரியல் செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கூட்டம் முடிந்ததும், அவற்றைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளியான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சோ்ந்த செந்தில் (வயது 50) என்பவா், வண்ண விளக்குகளைப் (சீரியல் செட்) பிரித்த போது, தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் செந்தில் பரிதாபமாக இறந்தாா்.
இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .