திருச்சி மேயருக்கு தர வேண்டும் எனக் கூறி பார்க்கிங் இடமே இல்லாத இடத்திற்கு 3 மடங்கு அதிக அடாவடி வசூல் செய்யும் திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் ஒப்பந்ததாரர்.
நுழைவு கட்டணம் அதிகமாக வசூலிப்பதை கண்டித்து கடந்த 5ஆம் தேதி சனிக்கிழமை அன்று உறையூர் மீன் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி குழுமணி சாலையில் உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தை உள்ளது.இந்த மீன் சந்தையில் வாகன நிறுத்தம் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு அதிகமாக பணம் வசூலிப்பதால் மீன் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்தி னர்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2028 ஆண்டு மார்ச் வரை திமுகவை சேர்ந்த திருச்சி புத்தூர் ஜனா என்பவர் ( சபரிநாதன் என்பவர் பெயரில்) எடுத்துள்ள ஒப்பந்தத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுவரை மீன் மார்க்கெட் வருகை தரும் பொது மக்களின் இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்லும் நிலையில், தற்போது பொதுமக்களின் இருசக்கர வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் 10 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பல்வேறு கடற்கரை மாவட்டங்களில் இருந்து மீன்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு 100 ரூபாய் கட்டணம் என்பது தற்போது ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணத்தை குறைக்க கோரி மீன் மார்க்கெட் கடைகளை திறக்காமல் வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இதனால் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபாரம் பாதிக்கப்பட்டது.
ஏப்ரல் 5ஆம் தேதி போராட்டம் நடத்திய வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கடைகள் செயல்பட தொடங்கியது ஆனால் இது இன்று வரை கட்டணங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை .
பார்க்கிங் இடமோ, வசதியோ இல்லாத மார்க்கெட்டிற்கு , வாக்கிங் வசூல் என்றால் தனியாக பார்க்கிங் இடம் வேண்டும், வாகனங்களை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் , இரவு நேரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் இதை எதுவுமே இல்லாமல் லிங்க நகர் பாலம் தாண்டி நிறுத்தும் வாகனங்களுக்கும் ஜனாவின் நண்பர் ஒப்பந்ததாரர் சபரிநாதனிடம் பணியாற்றும் ஆறு ஏழு நபர்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர் .
உதாரணமாக டூவீலருக்கு ரூ.10 என்றால் வசூல் செய்வது ரூ.30.
வெளியில் இருந்து வரும் மினி வேன்களுக்கு ரூ.50 க்கு ஆனால் வசூல் செய்வது ரூ.100
பெரிய மீன் லாரிகளுக்கு ரூ.100 என்றால் வசூல் செய்வது ரூபாய் 150 .
மீன் வெட்டும் கட்டைகளுக்கு ரூ.50 கட்டாயம் தரவேண்டும் .
மீன் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் பணி புரியும் தொழிலாளர்கள் என சுமார் 300 பேர் தினமும் தங்களது இரு சக்கர வாகனத்தில் உள்ளே வந்து செல்கின்றனர் இவர்களிடமும் கட்டாய வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இப்படி அடாவடி வசூல் செய்வது குறித்து இன்று வரை மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் , சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது , ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது .
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட ARO தாமோதரன் மூலமாக தான் எங்களுக்கு இந்த டெண்டர் கிடைத்தது எனவே அவருக்கும், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கும் மாதாமாதம் ஒரு தொகை கொடுக்க வேண்டும் . அதற்கு இப்படி மூன்று மடங்கு அதிகபடியாக அதிரடியாக வசூல் செய்தால் தான் முடியும் அந்த ஒப்பந்ததாரர் சபரிநாதன் கூறியுள்ளதாக கூறுகின்றனர்.
உண்மையில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ARO தாமோதரன் ஆகியோர் யாரிடமும் எதற்காகவும் ஒரு ரூபாய் கூட வாங்காத நேர்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இவர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒப்பந்ததாரர் பேசி வருவதாக கூறப்படுகிறது .