தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பேருந்து நிலையங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையமும் ஒன்று.
இந்த பேருந்து நிலையம் திருச்சி மாவட்டத்தின் மைய பகுதியில் உள்ளதால், டி.என்.எஸ்.டி.சி மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளே சென்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நீண்ட காலமாக திருச்சியின் மைய பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்தநிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சென்று வருவதற்கு பதிலாக, பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

டி.என்.எஸ்.டி.சி வெளியூர் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும். ஆனால், நகர பேருந்துகளை மாற்றுவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், தனியார் பேருந்து நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் காரணமாகவே, தனியார் பேருந்துகள் வைத்துள்ள நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வருகின்ற 2025 மே மாதம் திறக்கப்பட இருக்கிறது. இதனால், பேருந்து கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் பேருந்துகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், வெளியூரில் இருந்து வரும் டி.என்.எஸ்.டி.சி மற்றும் தனியார் பேருந்துகள் மே மாதம் முதல் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கே வரும். இந்த புதிய பேருந்து நிலையம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது “பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இனி வரும் நாட்களில் செல்ல இருப்பதால், டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இருக்கும். அதன்படி, 7 கி.மீ தூரம் அதிகரிப்பதால் கட்டணம் சுமார் ரூ. 4 வரை உயரலாம்” என்று கூறப்படுகிறது.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மொத்தம் 401 பேருந்துகள் ஒரே நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நகர பேருந்துகளில் 56 இடங்களும், வெளியூர் பேருந்துகள் நிறுத்த 141 இடங்களும், மற்ற பேருந்துகள் வந்து செல்ல 120 இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பார்க்கிங் வசதிக்காக 1,935 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், 216 கார்கள் நிறுத்தவும், 100 ஆட்டோக்கள் நிறுத்தவும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து இடங்களிலும் குளிரூட்டப்பட்ட வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை சிறப்பு தரம் வாய்ந்த பேருந்து நிலையமாக வகைப்படுத்தியுள்ளது. இங்கு வந்து செல்லும் பேருந்துகள் ஒரு நாளைக்கு ரூ. 25 கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.