முறைகேடாக மது விற்று வந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் மறுவாழ்விற்காக ஆட்டோ வாங்கித் தந்த இன்ஸ்பெக்டர். குவியும் பாராட்டு
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில், குடும்ப செலவுகளை சமாளிக்க சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு 6 முறை கைதான மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு மணிமங்கலம் காவல்துறையினர் வாடகை ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தனூர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான மாற்றுத்திறனாளி பெண் ஸ்டெல்லா மேரி. இவரது கணவர் சுரேஷ், காஞ்சிபுரம் மாவட்டம் ஆரணி பகுதியில் நெசவு வேலை செய்து வருகிறார். அவருக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், மாற்றுத்திறனாளி பெண் தனது குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்கிடையே வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கணவரின் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்த முடியாது என நினைத்த ஸ்டெல்லா ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக டாஸ்மார்க் கடையிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து அதை வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வருமானத்தை வைத்து குழந்தையின் படிப்பு உள்ளிட்ட வீட்டு செலவுகளை கவனித்து வந்துள்ளார்.
இரவு 10 மணிக்கு மேல் மற்றும் விடுமுறை நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில், 6 முறைக்கு மேல் அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து வழக்கில் சிக்கி வந்த பெண்ணை நேரில் சந்தித்த மணிமங்கலம் போலீசார், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம், உங்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்து தருகிறோம், வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.
அதன்பின் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மது விற்பனையில் ஈடுபடாமல், திருந்தி சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் அந்த மாற்றுத்திறனாளி பெண் ஸ்டெல்லா. இதையடுத்து அவரை நேரில் சென்று சந்தித்த காவல் ஆய்வாளர் அசோகன், ஸ்டெல்லா மேரியிடம் உங்கள் கணவருக்கு என்ன தொழில் தெரியும் என கேட்ட பொழுது, ஆட்டோ ஓட்ட தெரியும் என கூறியுள்ளார்.
உடனடியாக ஆரணியில் பணிபுரிந்து வந்த பெண்ணின் கணவர் சுரேஷை மணிமங்கலம் வரவழைத்து 50,000 ரூபாய் முன்பணமாக செலுத்தி புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டுவதற்கு அனுமதியும் வாங்கி கொடுத்துள்ளார். முறையாக ஆட்டோ ஓட்டி வீட்டிற்கான செலவுகளையும், மாதத் தவணையும் கட்டும்படி சுரேஷிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணின் மறு வாழ்வுக்காக ஆட்டோ வாங்கித் தந்த மணிமங்கலம் ஆய்வாளர் அசோகன் மற்றும் காவலர்களின் செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.