அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் விற்பனைக்கு இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்
பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்று பெறாத பொருட்கள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மக்கள் பலர் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து பெருகின்றனர். சின்ன ஊசி தொடங்கி பெரிய பெரிய கட்டில், பீரோ முதற்கொண்டு அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இவற்றில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், மின்சாதன பொருட்கள், சமையல் பொருட்கள் என பலவற்றிற்கு உரிய சான்றிதழ் வாங்க வேண்டிய விதிகள் உள்ள நிலையில், அவ்வாறு சான்று பெறாத பொருட்கள் இ-காமர்ஸ் தளங்களில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து BIS (Bureau of Indian Standarts) அதிகாரிகள் லக்னோ, குருகிராம், டெல்லியில் உள்ள இ-காமர்ஸ் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்றிதழ் பெறாத மின்சாதன பொருட்கள், மெட்டல் வாட்டர் பாட்டில்கள், உணவு மசாலாக்கள் என கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பொருட்களை இ-காமர்ஸ் நிறுவனம் மூலம் விற்றுவந்த நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தி வருகின்றனர்.