திருச்சி: விடுதியில் தங்கி +2 படித்த விழியிருந்தோர் பள்ளி மாணவி தற்கொலை: உரிய விசாரணை நடத்த பார்வையற்றோர் சங்கம் வேண்டுகோள்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 18). பார்வையற்றவரான இவர் திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மேலும் அவர், பள்ளி வளாகத்துக்குள் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி விடுமுறை நாளாகும்.
ஆனால் மாணவி ராஜேஸ்வரி நேற்று காலை விடுதியில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்துள்ளார்.
அங்கு வகுப்பறைக்குள் நுழைந்த அவர் துப்பட்டா வால் திடீரென தூக்குப் போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மற்றும் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்,
மேலும் பள்ளி மாணவி இறந்ததால் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் இரவு விசாரணை மேற்கொண்டனர்..
பார்வையற்ற மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பார்வையற்றோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.