திமுக அமைச்சருடன் உள்ள தொடர்பு நீடித்தால் திருச்சி அதிமுகவினரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவேன் . வீடியோ கான்பரன்ஸில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம் .
அதிமுக சார்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் வரலாற்றில் முதல்முறையாக கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையில் அதிமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கியமான நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸில் ஆலோசனை நடத்தினார்கள்.அதிமுக நிர்வாக ரீதியாக 82 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அந்த மாவட்டத்திற்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகள், கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து பேசினார். அப்போது வரை எல்லா மாவட்ட நிர்வாகிகளுடன் அமைதியாக பேசி வந்த எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தின் முறை வந்தபோது தீடீரென ஆவேசமாகி விட்டார்
திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிமுக நிர்வாகிகள் அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக எனக்கு தகவல் வருகிறது. இனியும் நீங்கள் இதுபோன்று ஆளும் கட்சி தரப்பினுடன் சேர்ந்து செயல்பட்டால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்தே நீக்கப்படுவீர்கள். அம்மா இருந்த காலத்தில் கட்சி எப்படி இருந்தது? திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் ஆளுங்கட்சியுடன் கைகோர்த்து செயல்படுகிறீர்கள். இனியும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

திருச்சியில் இருக்கக்கூடிய அதிமுக நிர்வாகிகள், திமுகவுடன் எந்த தொடர்பிலும் இருக்கக் கூடாது என்பதை உடனடியாக மறந்து விடுங்கள். அதிமுகவிற்காகத்தான் பாடுபட வேண்டும். அப்போதுதான் 2026-ல் நாம் வெற்றி பெற முடியும். மீண்டும் அதிமுக இழந்த செல்வாக்கை அங்கே பெற வேண்டும். மீண்டும் திருச்சி அதிமுக கோட்டையாக மாற வேண்டும்.
இது இறுதி எச்சரிக்கை. இனியும் திருந்தாதவர்கள், இனியும் மாறாமல் தொடர்ந்து ஆளுங்கட்சியோடு கூட்டணியில் மறைமுகமாக கைகோர்த்தால் அதிரடியாக நீக்கப்படுவீர்கள்” என கடுமையாகவும், கோபமாகவும் எச்சரிக்கை விடுத்தார்.இதனால், வீட்யோ அழைப்பில் இருந்த திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆடிப்போனார்கள்.
இப்பொழுதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்டம் தொடங்கி உள்ளது என அதிமுக சீனியர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.