தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையும் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, வாகன சோதனை மூலம் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தமிழகம் வருவதை தடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கஞ்சா பயன்படுத்தி பெண்களிடம் அடிக்கடி தொந்தரவு செய்த போதை கும்பல் பற்றி போலீசாரிடம் சட்டக்கல்லூரி மாணவி புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த போதைக்கும்பல் மாணவியை கொலைவெறியுடன் கடுமையாக தாக்கியுள்ளது.

தேனியைச் சேர்ந்த கீதரூபிணி என்ற மாணவி கம்பம் அருகே உள்ள கேகே.பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி தேனி அரசு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டின் அருகே இளைஞர்கள் மது அருந்தும் கூடமாகவும்,கஞ்சா புகைக்கும் கூடமாகவும் மாற்றியுள்ளனர். மாலை மற்றும் இரவு நேரங்களிலும் திறந்த வெளி மதுபான பாராக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் மது மற்றும் கஞ்சா போதையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த கும்பல் கல்லூரிக்கு செல்லும் கீதரூபிணியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளனர்.
இதனையடுத்து மாணவி கீதரூபிணி இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் இருசக்கர வாகன ரோந்துப் பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். போலீசார் பெயரளவிற்கு மது மற்றும் கஞ்சா கும்பலை எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். தங்களைப் பற்றி போலீசில் தகவல் அளித்ததால் ஆத்திரமடைந்த அந்த மது போதைக் கும்பல் கீதரூபிணி கல்லூரி முடிந்து கே.கே. பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, அவரைப் பின்தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீதரூபிணியை மது போதைக் கும்பல் இரும்பு வாளியால் தலையில் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியது.
இதனைத் தொடர்ந்து தலையில் ரத்தக் காயத்துடன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கீதரூபிணி கூறுகையில், அரசுப் பள்ளியை மது மற்றும் கஞ்சா போதை கூடாரமாக ஒரு சிலர் மாற்றி விட்டனர். அது குறித்து நான் காவல் துறையில் தகவல் தெரிவித்ததால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆனானேன். நான் தகவல் தெரிவித்த போதே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார்.