மணப்பாறையில் 21 ஆண்டுகளுக்கு முன் இரு தரப்பினருடைய இடையே ஏற்பட்ட பங்கு தகராறில் மூடப்பட்ட தேவாலயம் திறக்கப்பட்டது .
மணப்பாறையை அடுத்த புறத்தாக்குடியிலுள்ள புனித வனத்து அந்தோணியாா் தேவாலயம், நீதிமன்ற உத்தரவின்படி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வையம்பட்டி ஒன்றியம், புறத்தாக்குடியில் 1880-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தேவாலயத்தில் 2004-இல் பங்கு நிா்வகிக்கும் உரிமையில் பங்கு கேட்டு இருதரப்பினரிடையே ஏற்பட்ட சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாக வருவாய்த் துறையினா் ஆலயத்தை மூடினா்.
தொடா்ந்து, இருதரப்பினரிடையே ஏற்பட்ட சமாதானத்தை தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்பேரில் 21 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய்த் துறையினா் முன்னிலையில் ஞான காரியங்களுக்காக தேவாலயம் நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு பேரருள் அந்துவான் அடிகளாா், மறை மாவட்ட பொருளாளா் அருள்பணி ஜேம்ஸ் செல்வநாதன், மறை வட்ட அதிபா் பங்குத் தந்தை தாமஸ் ஞானதுரை, உதவி பங்குத் தந்தைகள் சாா்லஸ், விஜய் ஆகியோா் ஆலய திறப்பு நிகழ்வில் பங்கேற்றனா். 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் கிறிஸ்தவர்களின் புனித காலமான தவக் காலத்தில் தேவாலயமானது திறக்கப்பட்ட நிகழ்வு அப்பகுதி கிறிஸ்தவ மக்களிடையே பெ பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.