அரசு பள்ளி கணினி பயிற்சி அறையில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகளுக்கு, இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நாளடைவில், டேவிட் மைக்கேல் அந்த மாணவிகளுக்கு அதிகமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவிகள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால் நடந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால், தாங்கள் பள்ளியில் பயில பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி உள்ளனர். ஆனால் ஆசிரியரின் தொல்லை அதிகரித்தால், வேறு வழி இல்லாமல் பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் எழுதி போட்டுள்ளார்.
அந்தப் புகாரில், அவர் தங்களுக்கு செய்த கொடுமைகளை குறித்தும், கணினி ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டும் எழுதி இருந்தார். ஆனால் தனது படிப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற பயத்தில், அவர் தனது பெயரை புகார் கடிதத்தில் குறிப்பிடவில்லை. இதனால் சுதாரித்துக் கொண்ட அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இது குறித்து மறைமுகமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் படி, அவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து, கணினி ஆசிரியரான டேவிட்டின் நடவடிக்கைகளை நாள்தோறும் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், குறிப்பிட்ட மூன்று மாணவிகளை மட்டும், வகுப்பு நேரத்தில் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல், அடிக்கடி கணினி பயிற்சி அளிக்கும் அறைக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
இதனை ஆசியர்கள் கவனித்துள்ளனர். அந்த அறையில் வைத்து தான் ஆசிரியர் டேவிட் மைக்கேல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த சம்பவத்தை ஆசிரியர் ஒருவர் மறைந்து இருந்து நேரில் பார்த்து விட்டார். இதையடுத்து, அவர் நடந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், தலைமை ஆசிரியர், கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல் தனியாக அழைத்து விசாரித்துள்ளார்.
மேலும், மாணவிகளையும் தனியாக அழைத்து தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளார். தான் சிக்கிக் கொண்டதை அறிந்து கொண்ட டேவிட் மைக்கல், தலைமறைவானார்.
மேலும், இதுகுறித்து 3 மாணவிகளும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், டேவிட் மைக்கேல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த டேவிட் மைக்கேலை, கன்னியாகுமரியில் வைத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட டேவிட் மைக்கலை, சிறையில் அடைத்தனர்.