வாட்ஸ்அப் காலில் பெண்ணின் போட்டோவை அனுப்பக் கூறி கெஞ்சிய இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.டி.ஐ.ஜி. வருண் குமார் அதிரடி உத்தரவு.
கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (வயது 48).
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலையத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள நகைகளை காணவில்லை எனக் கூறி இளம்பெண் புகார் கொடுக்க வந்தார். அப்போது அவரிடம் செல்போன் நம்பரை இன்ஸ்பெக்டர் பெற்று கொண்டார்.
பின்னர் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு அடிக்கடி இன்ஸ்பெக்டர் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண்ணின் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், புகார் கொடுத்தீர்களா? இது சம்பந்தமாக யார் உங்களிடம் பேசியிருந்தால் அந்த எண்ணை எனக்கு வாட்ஸ்அப்பில் போட்டு விடுங்கள். வேறு என்ன சாப்பாட்டாச்சா?’ என கேட்டுள்ளார். தொடர்ந்து, ‘வாட்ஸ் அப் டிபியில் உள்ள போட்டோ சரியாகவே தெரியமாட்டேங்குது. டிபியில் உள்ளதை நன்றாக தெரியும் வகையில் வைக்க வேண்டியதுதானே’ என இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், ‘தெரிய வேணாம் என்று தான் அவ்வாறு வைத்துள்ளேன்’ என பதில் கூறி உள்ளார்.
உடனே இன்ஸ்பெக்டர், ‘அப்படி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எனக்கு தனியாக போட்டோ மட்டும் செண்டு பண்ணுங்க ப்ளீஸ், ப்ளீஸ்மா மறந்து விடாமல் செண்டு பண்ணுங்க’ என பேசி உள்ளார். வாட்ஸ் அப் காலில் ரெக்கார்டு செய்ய முடியாது என நினைத்து அந்த பெண்ணை இன்ஸ்பெக்டர் வாட்ஸ் அப் காலில் அழைத்து பேசி உள்ளார். ஆனால், அந்த பெண் இன்ஸ்பெக்டர் பேசும் வாட்ஸ் காலை மற்றொரு செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட திருச்சி சரக டிஐஜி வருண்குமார், இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியனை காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றி நேற்று உத்தரவிட்டு உள்ளார்.
இதே வெங்கமேடு காவல் நிலையத்தில் கடந்த மாதம் ஜனவரி 18ஆம் தேதி இளவரசன் என்னும் காவல்துறை உதவி ஆய்வாளர் பிளஸ்-1 மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது அதே காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகள் மீது இரண்டாவது பாலியல் புகார் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .