திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில்
24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.
சத்துணவு ,அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள், ஊர் புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை முறையான காலமறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் 25 விழுக்காடு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு ஐந்து விழுக்காடாக குறைக்கப்பட்ட அரசாணை 33 ஐ ரத்து செய்து மீண்டும் 25 விழுக்காடு வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணி பளுவை குறைக்க வேண்டும்.
அலுவலக பணி நேரத்திற்கு பின்பும், அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில் இன்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார்.
போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ், முன்னாள் மாநில தலைவர் சுடலையாண்டி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், அல்போன்சா, பிரேம்குமார், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாநில துணைத்தலைவர் செந்தமிழ்செல்வன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் ரகுராமன், இன்சூரன்ஸ் சங்க துணைத் தலைவர் ஜோன்ஸ், சி ஐ டி யு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், டி ஆர் இ யூ திருச்சி கோட்ட செயலாளர் கரிகாலன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில பொருளாளர் அஸ்லாம் பாஷா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் பேசினர்.
இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.