என் முன் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று,என்னை பலாத்காரம் செய்ய… ஓடும் ரயிலில் நடந்த சம்பவம் பற்றி கர்ப்பிணி பெண் கண்ணீர் பேட்டி
ஜோலார்பேட்டை: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பாலியல் பலாத்கார முயற்சித்தபோது, கத்தி கூச்சலிட்டதால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்ட சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்கிறார். 4 மாத கர்ப்பிணியான இவர், நேற்று முன்தினம் காலை தனது சொந்த ஊரான சித்தூர் செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் மகளிருக்கான தனிப்பெட்டியில் பயணம் செய்தார்.
காலை 11 மணியளவில் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கு மகளிருக்கான பெட்டியில் இருந்து அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில், கர்ப்பிணி மட்டும் தனியாக இருந்தார். ரயில் புறப்படும்போது அந்த பெட்டியில் வாலிபர் ஒருவர் திடீரென ஏறினார். இதனை கவனித்த கர்ப்பிணி ‘இது லேடீஸ் கம்பார்ட்மெண்ட், எதற்காக இதில் ஏறுகிறீர்கள்?’ என கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், ‘ரயில் புறப்பட்டுவிட்டது. அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறேன்’ என கூறி உள்ளார். தொடர்ந்து ரயில் சிறிது தூரம் சென்றதும் அந்த வாலிபர் கழிவறைக்கு சென்று ஆடைகளை கழற்றிவிட்டு வந்து கர்ப்பிணி முன்பு நிர்வாணமாக நின்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி அலறி கூச்சலிட்டார். அப்போது அந்த வாலிபர் கர்ப்பிணியையும் ஆடைகளை கழற்றிவிட்டு தனது ஆசைக்கு இணங்கும்படி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கர்ப்பிணியை வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சுமார் அரை மணிநேரம் கர்ப்பிணி போராடிய நிலையில், ரயில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்- காவனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, ஆத்திரமடைந்த வாலிபர் கர்ப்பிணியின் முடியை பிடித்து தரதரவென இழுத்து வந்து எட்டி உதைத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி உள்ளார். இதில் அலறி கூச்சலிட்டபடி கீழே விழுந்து ஒரு கை, ஒரு கால் முறிந்தபடியும், தலையில் படுகாயமடைந்தபடியும் கிடந்த கர்ப்பிணியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டனர்.
தகவலறிந்த காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் ரோவந்திகா மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கர்ப்பிணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குறிப்பிட்ட வாலிபரின் புகைப்படத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணியிடம் காண்பித்து குற்றவாளியை உறுதிப்படுத்தினர்.
இதில் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டது கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் ஹேமராஜ்(28) என தெரியவந்தது. தொடர்ந்து ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஹேமராஜின் வீட்டிற்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். 8 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த நிலையில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டர். இதில் கைதான சைக்கோ வாலிபர் ஹேமராஜிக்கு மேலும் சில வழக்குகளில் தொடர்பிருப்பதும், 2 முறை குண்டாசில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
* உயிர் தப்ப காரணமான பழுது பார்க்கும் பணி
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து அடுத்த நிறுத்தமாக காட்பாடி ரயில் நிலையம் இருக்கும் சூழலில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சுமார் 120 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த நிலையில் கே.வி.குப்பம் அருகே காவனூர் விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்டவாளம் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியை ரயில்கள் வழக்கத்திற்கு மாறாக குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது. அதனால்தான் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* கை உடைந்தும் கதறி போராடினேன்… அந்த சைக்கோவ வெளியே விடாதீங்க… பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கண்ணீர்
பலாத்கார முயற்சியில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறியதாவது:-

நான் திருப்பூரில் காலை 6.50 மணிக்கு ரயில் ஏறினேங்க. ஜோலார்பேட்டைக்கு வரும் போது 10.45 மணி இருக்கும். ஜோலார்பேட்டையில் நான் வந்த பெண்கள் பெட்டியில் இருந்து எல்லா பெண்களும் இறங்கிட்டாங்க. நான் மட்டுமே இருந்தேன். அப்போ ரயில் மூவ் ஆகுற நேரத்துல இந்த பையன் ஏறினாங்க. நான் சொன்னேன், ‘இது லேடீஸ் கோச். நான் ஒரு ஆள் தான் இருக்கிறேன். இறங்கி விடுங்கள்’ என்று சொன்னேங்க. அந்த பையன் ‘அடுத்த ஸ்டாப் காட்பாடியில இறங்கிடுறேங்க, அடுத்த ஸ்டாப் இறங்கிடுறேன். ரயில் கார்டு கொடி காட்டிட்டாரு ரயில் மூவ் ஆகிடுச்சு, அதனால ஏறிட்டேங்கன்னு’ சொன்னான். நான் ஒரு பக்கமாக போய் உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரம் அப்படி, இப்படின்னு ரவுண்டிங் அடிச்சாங்க. அப்புறம் ஆளையே காணோம். பாத்ரூம்ல இருந்து வந்தாங்க. அவனோட டிரஸ் கழட்டிட்டு வந்தாங்க. வந்தவுடனே என் டிரஸ் கழட்ட பாத்தாங்க.
நான் கெஞ்சினேங்க, என் வயித்துல குழந்தை இருக்கு, நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை. உனக்கும் அக்கா, தங்கச்சி இருக்கும்ல, அதை நினைச்சி பாரு தம்பி, இந்த மாதிரி செய்யாதன்னு சொன்னேன். சொல்லிட்டு, ரயில் செயினை இழுக்க சீட்டின் மீது ஏறினேன். உடனே என் தலைமுடியை பிடித்து இழுத்து அடிச்சான். நானும் பதிலுக்கு முடிஞ்ச வரை அவனை அடிச்சேங்க. உடனே பாத்ரூமுக்கு போய்ட்டு கழிவறைக்கு போய் லாக் செஞ்சிட்டு ரயில் சங்கிலியை இழுக்கலாம்னு நினைச்சேங்க. அங்கும் வந்து என்னை தரதரவென இழுத்து அடிச்சான். நான் ரயிலின் கைப்பிடி கம்பியை ரெண்டு கைகளாலும் கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்ங்க.
இதை பார்த்து எனது கையை உடைச்சுட்டான். ஒரு கை சப்போர்ட் தான் கிடைச்சது. கீழே விழாமல் இருக்க முடிந்தவரை கெட்டியாக பிடிச்சுட்டு போராடினேன். அப்புறம் எனது காலை கீழே தள்ளிட்டு, பிறகு என்னை எட்டி உதைத்து கீழே தள்ளிட்டான்ங்க. அதன் பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பிறகு ஆம்புலன்ஸ்காரங்க வந்து என்னை கூட்டி வந்து இங்க அட்மிட் பண்ணாங்க. என்னால அங்க எந்திரிச்சு கூட உட்கார முடியல, தலையில ரத்தம் கொட்டுச்சு, ஆம்புலன்ஸ்ல பஸ்ட் எய்டு செஞ்சாங்க. அப்புறம் பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போனா சரியா இருக்காது.
கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறோம்னு சொல்லி இங்க வந்து சேர்த்தாங்க. ஆம்புலன்ஸ் காரங்க நம்பர் எதுவும் கேட்கலிங்க. என்னை பாதுகாத்துக்க சுமார் அரை மணி நேரமாக அவனோடு சண்டை போட்டு போராடினேன். எனக்கு நடந்தது போல இனி எந்த ஒரு பொண்ணுக்கும் நடக்கக் கூடாதுங்க. முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு ஏதாவது தண்டனை வாங்கி கொடுங்க. அவன் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள்ல ஈடுபட்டதா சொல்றாங்க. அவன் வெளியே திரியறதாலத்தான் இந்த மாதிரி நடந்துச்சு. இதுமாதிரி சைக்கோவை வெளிய விடாதீங்க. மக்கள் என்ன சொல்றாங்களோ அந்த தண்டனை கொடுங்க. அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கணும். அவன் ஜெயில்ல இருந்து வரவே கூடாது. இந்த மாதிரி பசங்க அதிகமாகிட்டாங்க. பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ரயிலிலும் பாதுகாப்பு கிடையாது, நடந்து போகும் போதும் பாதுகாப்பு கிடையாது. அதனால இந்த மாதிரி ஆட்களை விடாதீர்கள். இவ்வாறு அவர் கண்ணீருடன் கதறியபடி கூறினார்.
* சென்னை பெண்ணிடம் செயின் பறித்து ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர்
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி சென்னை அம்பத்தூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலூர் வருவதற்காக ரயில் மூலம் அரக்கோணம் வந்து அங்கிருந்து லிங்க் ரயில் மூலம் வேலூர் கன்டோன்மென்ட் செல்ல பெண்கள் தனிப்பெட்டியில் பயணித்துள்ளார். ரயில் காட்பாடியில் நின்று புறப்பட்டபோது அதில் ஏறிய ஹேமராஜ், காட்பாடியை தாண்டி கழிஞ்சூரை தாண்டியதும் பெண்ணிடம் செல்போனை பறித்துள்ளார். உடனடியாக சுதாரித்த இளம்பெண் தனது செல்போனில் இருந்து வீடியோ காலில் உறவினரை தொடர்பு கொண்டுள்ளார். ஆத்திரமடைந்த ஹேமராஜ், அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, செல்போன் மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, இளம்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பினார். இந்த வழக்கில் அவர் குண்டாசில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளார்.
* காதலியை பலாத்காரம் செய்து கொன்றவர்
ஹேமராஜ் கடந்த 2024ம் ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். அவரை அழைத்து சென்று, குடியாத்தம் அருகே உள்ள மலையடிவாரத்தில் பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொன்றார். இந்த வழக்கில் குடியாத்தம் டவுன் போலீசாரால் குண்டாஸில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்தவர் மீண்டும் தனது சைக்கோ வேலையை ஆரம்பித்து கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயன்ற வழக்கில் தற்போது கைதானது குறிப்பிடத்தக்கது.
* கைதான கொடூரனுக்கு காலில் மாவு கட்டு
பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு, கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய ஹேமராஜை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்ய சென்று அவரது வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது வெளியே வந்த ஹேமராஜ் போலீசாரை பார்த்ததும் தான் குற்றவாளி என்பதை அடையாளம் கண்டுபிடித்துவிட்டதை அறிந்து, அனைவரையும் தள்ளிவிட்டு இருளில் தப்பி ஓடினார். ஆனால் போலீசார் விடாமல் அவரை விரட்டி சென்றனர். அப்போது பள்ளத்தில் தடுமாறி விழுந்த ஹேமராஜின் இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹேமராஜை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
ஓடும் ரயிலில் கர்ப்பணிக்கு பாலியல் தொல்லை அளித்து கீழே தள்ளிய விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, புதிய கிரிமினல் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்.ஐ.ஆர் உள்ளிட்ட விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.