சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூரில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் உள்ள இந்த மாதிரி பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர், விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக ஈரோட்டை சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 2-ந் தேதி அந்த மாணவியை பார்த்து அழகாக இருப்பதாக கூறி பாலியல் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு மாதிரி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும், சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர் மீது ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இதேபோல் வேறு எந்த மாணவிக்கும் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.