திருவெறும்பூர் அருகே நள்ளிரவு பயங்கரம் ;
கள்ளக்காதல் தகராறில் பெயிண்டர் சரமாரி குத்தி கொலை
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் பிரபாகரன் (
வயது 37 ) திருமணம் ஆகாத இவர் அப்பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலையில் வேலைக்கு சென்ற பிரபாகரன் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பிரபாகரனின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பிரபாகரன்
வேங்கூர் பகுதியில் உள்ள ராயல்கார்டன் விஸ்தரிப்பு பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
தகவல் அறிந்த காவல்துறை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பனாவத், திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
மேலும் மோப்பநாய் நிலா வரவழைக்கப்பட்டது.
அது கொலை நடந்த பகுதியில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்றது.
முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
திருமணமாகாத இவர் வேங்கூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த
ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அவரது கணவர் பிரபாகரனை நண்பர்கள் உதவியுடன் ராயல் கார்டன் விஸ்தரிப்பு பகுதியில் வழிமறித்து குத்தி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள இரும்பு கம்பெனி சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பெயிண்டர் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் மற்றும் வேங்கோர் பகுதிகளில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.