ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பங்கேற்றன.
பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டிகளில் இந்தியா vs இங்கிலாந்து, ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆனால் ஏன் பேட்டிங்கை எடுத்தோம் என வருத்தம்படும் அளவு, இந்திய பந்துவீச்சாளர்கள் ஒரு தரமான பவுலிங்கை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர்கள் 5 பேரின் ஸ்டம்புகளும் தகர்க்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
பருணிகா மற்றும் வைஷ்ணவி தலா 3 விக்கெட்டுகளும், ஆயுஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்தின் தொடக்க வீரர் பெர்ரின் 45 ரன்களும், கேப்டன் அபி 30 ரன்களும் சேர்த்தனர்.
114 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 ஓவரில் முடிவில் 117/1 என வெற்றி ரன்களை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது. தொடக்க தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கமாலினி அரைசதமடித்து அசத்தினார்
அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில்,
மற்றொரு அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2024 ஆண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதிய நிலையில், தற்போது 2025 மகளிர் யு19 டி20 உலகக்கோப்பைய்லி இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. இந்த இறுதிப்போட்டியானது நாளை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2-ம் தேதி பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது