தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள துறைகளாக, தமிழக வருவாய் மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன. எனவேதான், இந்த துறைகளில் பல்வேறு லஞ்ச புகார்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை, குறையவில்லை
பொறுப்புள்ள அதிகாரிகளே, இப்படி தினம் தினம் கைதாவது பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. இதில் காவல்துறையும் இணைந்துள்ளது.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், ஒருசிலர் செய்யும், தவறுகளால் மொத்த துறைகளுக்கும் கெட்ட பெயர் வந்துவிடுகிறது.
நேற்று மதுரையில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் சண்முகநாதன் (வயது 35) இவரிடம் எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த கவிதா என்பவர், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறார்.
அதாவது, ஏற்கனவே, ஜெயந்திபுரம் பகுதியில் கவிதா வசித்து வந்துள்ளார் அப்போது முன்விரோதம் காரணமாக சிலர் கவிதாவை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால், இதில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 2 பேர் இன்னும் கைதாகவில்லை.

எனவே, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றால், ரூ.1 லட்சம் தேவை என்று சண்முகநாதன் லஞ்சம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு கவிதா அதிர்ச்சியும் தயக்கமும் அடைந்துள்ளார்.
இதன் பிறகு, ரூ.1 லட்சம் வேண்டாம், வெறும் ரூ.70,000 தந்தால் போதும் என்று சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்க எதற்காக லஞ்சம் தர வேண்டும்? என்று கவிதா நினைத்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாமால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சண்முகநாதன் குறித்து முறையிட்டார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ரூ. 30,000 லஞ்சம் கொடுக்க சண்முகநாதனிடம் முன்வந்துள்ளார்.
அதன்படியே, புதூர் பஸ் நிலையம் அருகே வர கூறி சண்முகநாதனுக்கு கவிதா ரூ.30,000 லஞ்சமாக கொடுத்தார்.
இந்த பணத்தை வாங்கிய சண்முகநாதன், அதை தன்னுடைய பைக் பெட்ரோல் டேங்கில் உள்ள கவரில், வைத்துகொண்டிருக்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டி எஸ் பி சத்தியசீலன் , இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ் பிரபு, சூரிய கலா தலைமையிலான போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதையடுத்து, அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் லஞ்சம் வாங்கிய சண்முக நாதனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் .