செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 28) இவர், மேலவளம்பேட்டையில் உள்ள பூச்சி மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயராஜுக்கும் பவுன்சூர் பகுதியை சங்கீதா (வயது 32) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சங்கீதா, காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயராஜுடன் சங்கீதாவுக்கும் உள்ள உறவு குறித்து, சங்கீதாவின் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து, சங்கீதா தனது கணவரை விட்டு பிரிந்து கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது தாய் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆனால் அவரது தாய் வீட்டிலும், சங்கீதா ஜெயராஜுடனான கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை சங்கீதா மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரும், மகாபலிபுரத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது சங்கீதா அழைப்புகளை பார்த்த ஜெயராஜ் அதில் பல ஆண் நண்பர்களுடன் சங்கீதா பழகுவது தெரிய வந்தது.
இதனால் கள்ளக்காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சங்கீதா பலருடன் செல்போனில் பேசுவதாக கூறி ஜெயராஜ் தகராறு செய்துள்ளார். பின்னர், அவர் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, சங்கீதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனால் பதறிப்போன ஜெயராஜ், இது குறித்து மகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, விடுதி ஊழியர்களிடமும் ஜெயராஜ் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கீதாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயராஜை கைது செய்து விசாரித்தனர். இதனிடையே, பிரேத பரிசோதனையின் முடிவில், சங்கீதா கழுத்து இறுக்கியதால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து, ஜெயராஜிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர் கூறும் போது, “சங்கீதாவை ஆசை வார்த்தை கூறி விடுதிக்கு அழைத்து வந்தேன்.
அங்கே அவரது செல்போனை பார்த்த பின் அவருக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்தது. இதனை சங்கீதாவுடன் கேட்டபோது அவர் என்னுடன் வாக்குவாதம் செய்தார் . வாக்குவாதம் முற்றியதில், நான் அவரது கழுத்தை சுடிதார் துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்து விட்டேன். பின்னர், அவரது உடலை மின்விசிறியில் தொங்க விட்டேன்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் ஜெயராஜை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.