உதயாநிதி ரசிகர் மன்ற வேலையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியும் பாருங்கள்.43 அரசு பள்ளி மாணவிகளை சீரழித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தஞ்சை பாஜகவினர் அறிக்கை.
தஞ்சாவூரில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் ஒருவர் 43 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக பரபரப்பு புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
‘பள்ளிக்கல்வித்துறை என் ஏரியா’ என எப்போதும் வீராப்பு பேசும் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களே! தங்களது கோட்டையில் படிக்கும் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு கிடையாதா? அல்லது தங்களது துறையை கவனிக்க இயலாத அளவுக்கு தங்களுக்கு துணை முதல்வரின் ரசிகர் மன்ற வேலைகள் முக்கியமாகிவிட்டதா? தஞ்சை அரசுப்பள்ளியில் 43 மாணவிகளை கணித ஆசிரியரே வன்கொடுமை செய்யும் அளவிற்கு தான் தங்களது தலைமையில் அரசு பள்ளிகள் செயல்படுகின்றவா? வன்கொடுமை குறித்து புகாரளித்தப்பின்பும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் முதன்மை கல்வி அதிகாரியும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை காவல்துறையில் புகார் அளிக்காது வெறுமனே இடைநீக்கம் மட்டும் செய்தது ஏன்?
சட்டப்படி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டால் தங்களது பள்ளிக்கல்வித்துறையின் லட்சணம் வெளிவந்துவிடும் என்ற பயமா? கடந்தாண்டு அக்டோபர் மாதமே மாணவிகளுக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்து குழந்தைகள் நல அலுவலர் ஒரத்தநாடு காவல்துறையில் புகார் அளித்தும், தற்போது வரை சட்டத்தை மீறி காவல்துறையில் புகார் அளிக்காமல் விட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
நடவடிக்கை எடுக்கப்பட்டால் திமுகவின் ஆட்சியில் பள்ளிச்சிறுமிகள் முதல் மூதாட்டி வரை மகளிருக்கு பாதுகாப்பில்லை என்ற உண்மை வெளிப்பட்டுவிடும் என்ற பயமா? மேடைகளில் வெட்டி வீராப்பு மட்டும் பேசாது, எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துங்கள் அமைச்சரே!வாரிசின் விளம்பரத்தைவிட இளம்பிஞ்சுகளின் எதிர்காலம் முக்கியம் என்பதை உணருங்கள் என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர் .