ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் . பணம் இரட்டிப்பு செய்வதாக கூறி ரூ.500 கோடி வரை மோசடி. பெண் உள்ளிட்ட 3 பேர் கைது
சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.500 கோடி அளவில் வசூலித்த பெண் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் சிவகாமி திருமண மண்டபம் இருக்கிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு வேலூரைச்சேர்ந்த விஜயாபானு (வயது 55), என்பவர் இந்த திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் அலுவலகத்தை திறந்து செயல்படுத்தி வந்தார்.
இங்கு ஒருவர் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அதுவும் 7 மாதம் வழங்கிய பிறகு டெபாசிட் செய்த ரூ.1 லட்சம் திரும்ப வழங்கப்படும் என்று விஜயாபானு கூறினார். ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தால் கூட மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவதுடன், 8வது மாதத்தில் டெபாசிட் தொகை வழங்கப்படும் என்றார். இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரகணக்கானனோர் அவரிடம் பணத்தை டெபாசிட் செய்தனர். நாளடைவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தனி நபர்கள் டெபாசிட் செய்தனர்.
நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் இவ்வாறு டெபாசிட் செய்யப்பட்டது. வாங்கிய பணத்திற்கான ரசீது கிடையாது. டோக்கன் ஒன்று வழங்கப்படும். ஆனால் அவர் கூறியதுபோல டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் குறிப்பிட்ட நாளில் வழங்கப்பட்டு வந்தது. 3 ஆண்டுகளில் ரூ.500 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்குவது, மக்களுக்கு திருப்பி கொடுப்பதற்காக 50 பேர் அங்கு வேலையில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக உளவுப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்ததையடுத்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு, எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொதுமக்களிடம் பெருமளவில் பணம் வசூலிக்கப்படுகிறது என்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான 10 போலீசார், அந்த திருமண மண்பத்திற்கு சென்றனர். அப்போது அங்கு 200க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இருந்தனர், பண பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தது. அவர்களை சுற்றிவளைத்த போலீசார், அக்காட்சிகளை படம் பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்தவர்கள் திடீரென டி.எஸ்.பி., பெண் போலீஸ் உள்ளிட்டோர் மீது தாக்குல் நடத்தினர். இதுகுறித்து உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.

துணை கமிஷனர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மண்டபத்திற்கு விரைந்து அதிரடியாக உள்ளே நுழைந்து போலீசாரை தாக்கியவர்களை தனிமைப்படுத்தி விசாரணை நடத்தினர். பின்னர், அறக்கட்டளை தலைவரான அம்மாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த விஜயாபானு (48), அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா (47), தியாகி நடேசன் தெருவை சேர்ந்த பாஸ்கர் (49) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அறக்கட்டளை ஊழியர்களான அம்மாபேட்டை அமுதா, பொன்னம்மாபேட்டை மதலைமேரி (37), சென்னை குன்றத்தூர் பிடிசி லைனை சேர்ந்த மைக்கேல் (34) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமண மண்டபத்தில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது.
இதில் ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூலானது தெரியவந்தது. அதனை மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்றுவந்து, வங்கி அதிகாரிகளை வர வைத்து எண்ணும் பணி நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அறக்கட்டளையை நடத்தி வந்த விஜயாபானு, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வேலூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அதில் அவர் தோல்வியடைந்த நிலையில், அவர் மீது புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் பணம் பறிமுதல் செய்த தகவல் அறிந்த பணம் கட்டியவர்கள் மண்டபத்தை முற்றுகையிட்டு கண்ணீர் வடித்தனர். பணம் கட்டியவர்கள் மண்டபத்தை சுற்றி சுற்றியே வந்தவண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
குப்பை தொட்டியில் கட்டுக்கட்டாக பணம் ரூ.2 கோடி சிக்கியது
நேற்று போலீசார் நடத்திய திடீர் ஆய்வில், மண்டப கழிவறையில் கட்டுக்கட்டாக பணம் கிடந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். டஸ்ட்பின் பாக்ஸ்களில் ரூ.12 லட்சம், ரூ.10 லட்சம் கிடந்தது. இதுதவிர 4 பெரிய பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இவை ரூ.2 கோடியை தாண்டும் என போலீசார் தெரிவித்தனர்.