திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது.

கோயில் வரி செலுத்த மறுத்து கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்கள் காட்டி மிரட்டிய 8 இளைஞர்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி அப்பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கிராம துணைத்தலைவர் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கிராமத்தில் உள்ள குடும்பத்திற்கு கோவில் வரி தலா ரூ.3 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. கும்பாபிஷேக செலவுகள் அதிகரித்ததால் கூடுதலாக ரூ.1000 கிராம மக்களிடம் வசூலிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வாலிபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் கண்ணன் வீட்டின் முன் திரண்டு அவரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.
இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து திருவானைக்கோயில் களஞ்சியத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (வயது32), ஜெயபிரகாஷ் (வயது29), அரவனுார் மேல பாண்டமங்கலத்தைச் சேர்ந்த சிவா (வயது37), தீபக் (20), தினேஷ் (வயது21), சசிதரன் (வயது21), கிஷோர் (வயது20), நவீன் (வயது21) ஆகிய 8 பேரை களஞ்சியம் கிராமத்தின் துணை தலைவரை மிரட்டியதாக கைது செய்தனர். மேலும் இவர்ளிடமிருந்து 2 அரிவாள், 1 கத்தி, மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.