திருச்சி அஞ்சல் துறை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் விழிப்புணர்வு நடைபயணம் , உடற்பயிற்சி.
மத்திய அரசு, பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கவும், உடற்பயிற்சியை நம் தினசரி அங்கமாக உருவாக்கவும், பிட் இந்தியா மிஷனின் ஒரு பகுதியாகவும், பிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதல் பிரச்சாரத்தை தொடங்கியது. மேலும் தினம்தோறும் அரை மணி நேரம், உடற்பயிற்சி என்ற விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்பும் விதமாக பல வகையான பிரச்சாரங்கள் மற்றும் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.
இதன் தொடர்பாக, மத்திய மண்டலத்தின் கீழ் உள்ள ஸ்ரீரங்கம், கரூர், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கடலூர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள தபால்காரர்கள் மூலம் பொது மக்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அஞ்சல்துறை சார்பாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் உடற்பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி டி. நிர்மலா தேவி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் உடற்பயிற்சி நிகழ்விற்கு முன், திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஓ. ஞானசுகந்தி அவர்கள் உடற்பயிற்சியின் நன்மை குறித்து உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வை இரண்டு பயிற்சியாளர்கள் வழிநடத்தினர்.
விழிப்புணர்வு நடை பயணத்தின் போது உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் பொருத்திய பதாகைகள் சுமந்து அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி மண்டல அலுவலகம், திருச்சி கோட்ட கண்கணிப்பாளர் அலுவலகம், திருச்சி ரயில்வே அஞ்சல் சேவை அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்தினை சேர்ந்த உதவி இயக்குனர்கள், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்கள், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்கள், தபால் அதிகாரிகள், எழுத்தர்கள், தபால்காரர்கள், பன்முக திறன் பணியாளர்கள், உதவி அஞ்சல் கண்கணிப்பாளர்கள், மெயில் ஓவர்சியர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் அலுவலர்கள் உட்பட 160-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி முதுநிலை கோட்ட கண்கணிப்பாளர் பிரகாஷ், ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் மற்றும் திருச்சி மண்டல அலுவலக உதவி இயக்குனர் .பசுபதி ஆகியோர் செய்திருந்தனர்.