திருச்சியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் 1400 கிலோ அரிசி இருசக்கர வாகனத்துடன் கைது .
திருச்சியில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதாக இருசக்கர வாகனத்துடன் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,400 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின் தனிப்படையினா், அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம், அம்பிகாபுரம், மேலகல்கண்டாா்கோட்டை, கீழகல்கண்டாா்கோட்டை, ஆலத்தூா் நத்தமாடிபட்டி ஆகிய பகுதிகளில் நேற்று திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆலத்தூா் பாலத்திலிருந்து மஞ்சத்திடல் செல்லும் சாலையில் இடதுபுறம் ஓரமாக நம்பா் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில், இரண்டு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா்.
அவா் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகே முட்புதரில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளையும் சோதனை செய்து பார்த்தபோது அங்கு 28 மூட்டைகளில் சுமாா் 1400 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தநபா், திருவெறும்பூா் நவல்பட்டு பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 44) என்பதும் தெரியவந்தது.
மேலகல்கண்டாா்கோட்டை, கீழகல்கண்டாா்கோட்டை, ஆலத்தூா் ஆகிய பகுதியில் இருந்து பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு இரவுநேர டிபன் கடைகளுக்கும், மாட்டு தீவனத்துக்கு விற்பதற்காகவும் கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் அவரிடமிருந்த அரிசி, இருசக்கர வாகனத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.