கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் அளித்த திமுக அரசு ஜல்லிக்கட்டில் இறந்த வீரருக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்?
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.
அதேபோல் மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை நவீன் குமார் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 50 பேர் வீதம், மொத்தமாக 11 சுற்றுகள் நடைபெற்றன. இதில் 10வது சுற்றின் போது மதுரை விளாங்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான நவீன்குமார் களமிறங்கி இருந்தார். இவர் மாடுபிடிக்க முயன்ற போது, ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் மார்பு, கழுத்து பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.
இதன்பின் உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நவீன் குமார் உயிரிழந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இளைஞர் உயிரிழந்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதன்பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நவீன் குமாரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினரும், உறவினர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நவீன் குமார் தாய் மற்றும் சகோதரி இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
எனது ஒரே மகன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை பாதுகாத்து வந்தான்.
ஜல்லிக்கட்டு விளையாட சென்ற அவன் சென்று இன்று எங்களுடன் இல்லை. அரசு சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த என் மகனுக்கு, மாவட்ட ஆட்சியரே, மாநகராட்சி ஆணையரோ ஒரு இரங்கல் கூட கூறவில்லை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணமாக அளித்தது . ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடி உயிரிழந்தால், அரசு தரப்பில் இரங்கல் கூட தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது.
எங்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் அல்லது அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றால், சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றும் கூறி இருப்பதால், அங்கு பரபரப்பு சூழல் காணப்படுகிறது.