திருச்சியில் டிஎம்எஸ்எஸ் 50 -வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு நாளை ரூ.50 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு.
ரூ. 50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது:
திருச்சியில் டிஎம்எஸ்எஸ்
50 -வது பொன்விழா
திருச்சி மறைமாவட்ட ஆயர் எஸ். ஆரோக்கியராஜ் தலைமையில் நடக்கிறது.
திருச்சியில் டிஎம்எஸ்எஸ் 50-வது பொன்விழா ஆண்டு விழாவையொட்டி ரூ. 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கான கடன் உதவிகள் வழங்கப்படவுள்ளது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திருச்சி டிஎம்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎம்எஸ்எஸ் இயக்குநரும் செயலாளருமான எஸ். சவரிமுத்து, பொருளாளர் ஏ. அமல்ராஜ் ஆகியோர் கூறியதாவது :
திருச்சி மறைமாவட்ட பல்நோக்கு சமூகப்பணி மையம் (டிஎம்எஸ்எஸ்) தனது 50-வது பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சமூகப்பணிக்கான மையம் தற்போது 50 ஆண்டுகளை கடந்து மக்கள் பணியாற்றி வருகிறது. இம்மையத்தின் வளர்ச்சிக்கு இருந்த பலருக்கும் நன்றிகளை கூறும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். நிகழ்வையொட்டி இன்று ஜனவரி 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை), திருச்சி மறைமாவட்ட ஆயர் எஸ். ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும் கொடியேற்றும் நிகழ்வும் நடைபெறுகிறது.
தொடர்ந்து சனிக்கிழமை (ஜன.11 ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு அருங்கொடை இல்லத்தில் பொன்விழா நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெறுகிறது. அதில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
குறிப்பாக சிறு,குறு விவசாயிகளுக்கான வேளாண் உபகரணங்கள், மாற்றுத்திறனாளி களுக்கான செயற்கை உபகரணங்கள், மூன்று சக்கர மிதிவண்டிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் (25பேருக்கு), மாவு அரவை இயந்திரங்கள் (25 பேருக்கு), கிராமப்புற குடும்பத்தலைவிகள் 50 பேருக்கு (தலா 2) ஆடுகள், 3 பள்ளிகளுக்கு 22 கணினிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றந. மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 25 லட்சம் கடன் உதவிகளும் வழங்கப்பட உள்ளது. மகளிர் குழுவினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தொடர்ந்து டிஎம் எஸ்எஸ் உதவி வருகிறது. அந்த வகையில் மகளிர் கடன் உதவி மட்டும் மாதம் ரூ. 1 கோடிக்கு வழங்கப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல இதுவரையில் சுமார் 3 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
இவ்விழாவிற்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் எஸ். ஆரோக்கியராஜ் தலைமை வகிக்கிறார். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முதன்மை விருந்தினராக திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் பங்கேற்று பேசுகிறார்.விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாவட்ட உதவி செயல் படுத்தும் அலுவலர் ரமேஷ் முட நீக்கியல் வல்லுனர் ஜெகன் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை டி.எம் எஸ்.எஸ்.எஸ் இயக்குனர் மற்றும் செயலர் சவரிமுத்து, பொருளாளர் அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்.