போக்சோ வழக்கில் கைதான அடுத்த நாளே வெளியே வந்து மீண்டும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை . கமிஷனர் அலுவலகத்தில் தாய் கதறல்.
சென்னை வளசரவாக்கத்தில் போக்சோ வழக்கில் கைதான நபர், காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் என் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அசிங்கமாக பேசி மிரட்டுவதாகவும் தனக்கும் தனது மகளுக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க பரபரப்பு புகார் ஒன்றை முன்வைத்தார். 14 வயதே ஆன என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பந்தல் ரவியின் மகன் பிரசாந்த் (வயது 27) போக்சோ வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகும் வெளியே வந்துவிட்டான் என்றும், வெளியே வந்தும் என் பெண்ணுக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்து அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலீஸ் நிலையம் சென்றால் யாரும் கண்டுகொள்ள மாட்டேங்கிறார்கள் என்றும் கண்ணீர் மல்க புகார் கூறினார்.

இது தொடர்பாக பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணின் தாய் கூறியதாவது:- 14.4.2024 அன்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை என்று வளசரவாக்கம் அனைத்து மகளில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் திருவள்ளூர் நீதிமன்றத்தில் முறையிட்டு, கோர்ட் எஃப் ஐ ஆர் மூலமாக போலீசில் கூறி பந்தல் ரவியின் மகன் பிரசாந்த் மீது வழக்கு பதியப்பட்டது. எஃப் ஐஆர் பதிவு செய்தும் கூட சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.
இப்போது புத்தாண்டையொட்டி, நேற்று முன் தினம் மீண்டும் அதே மாதிரி தகாத வார்த்தை பேசி என்னுடைய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது உன்னை படுக்கைக்கு அழைத்தேன். ஆனா நீ போலீசில் புகார் கொடுத்த.. என்ன தான் நீ போலீசில் புகார் கொடுத்தாலும் நான் வெளியே வந்துடுவேன். எனக்கு செல்வாக்கு இருக்கு. மீறி இன்னொரு முறை போலீஸ் நிலையத்துக்கு போனால், உன்னையும் உன் அம்மாவையும் உயிரோடு கொளுத்தி எரிச்சிடுவேன். என்று மிரட்டினார். இதனால் எங்களுக்கு அங்க இருப்பதற்கே பயமாக இருக்கிறது.
பந்தல் ரவி மகன் பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறார்கள் .. அவர் மீது காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. போலீசிடம் புகார் அளிக்க சென்றாலே எங்களை கண்டுகொள்ள மாட்டேங்கிறார்கள் . அவர பாருங்க. இவர பாருங்க என்று சொல்லி எங்களை ஏமாற்றுகிறார்கள். ஊரில், சுற்றுவட்டாரத்தில் யாரை கேட்டாலும் பிரசாந்த் மோசமானவன் என்று தான் சொல்வாங்க. ஆனால் பிரசாந்தை நல்லவன் என்று போலீஸ்காரர்களே சொல்கிறார்கள்.
அவன் மீது புகார் கொடுக்க போனால் வாங்கவே செய்யமாட்டாங்க.. எங்க மனுவை வாங்காமல் நிராகரித்து விடுகின்றனர். இதனால் தான் கோர்ட்டுக்கு போனோம். போக்சோ வழக்கு போட்டும் அவர்கள் விட்டுவிட்டார்கள். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு தான் நான் போராடுகிறேன். ஞானசேகரன் வழக்கில் நடந்தது போல தான், பிரசாந்த் வழக்கிலும் என் மகள் பாதிக்கப்பட்டுள்ளாள். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 16க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும் ஞானசேகரன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.