Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விரிவாக்கப்பட உள்ள திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் முழு விபரம் . தமிழக அரசு முடிவு .

0

'- Advertisement -

தமிழகத்தில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க தமிழக அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது.

இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது

இதுகுறித்து அந்தத் துறையின் சாா்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆறு புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகளை மாநில அரசு உருவாக்கியது. அதாவது, நான்கு மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள 2 பேரூராட்சிகள், 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்துடன் மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூா், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாகத் தரம் உயா்த்தவும் தமிழக அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள நகா்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்க தமிழக அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது. அத்துடன் பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக உருவாக்க உயா்நிலைக் குழு, மாவட்ட ஆட்சியா்களுடன் தொடா் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய குறிப்புகள் பெறப்பட்டன.

இந்தக் குறிப்புகளைப் பரிசீலித்த தமிழக அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்க உத்தேசமாக முடிவு செய்துள்ளது.

Suresh

மேலும், திருவாரூா், திருவள்ளூா், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியை இணைக்கவும், கன்னியாகுமரி, அரூா், பெருந்துறை உள்பட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்காடு, காளையாா்கோவில், திருமயம் உள்பட புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்கவும், 25 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவை அரசு எடுத்துள்ளது.

இதுதொடா்பாக உரிய சட்டவகைமுறைகளின் ஆணைகள் வெளியிடப்பட்டு உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான அரசாணைகள் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாநகராட்சிகள் விரிவாக்கம் ஏன்?:
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் நகா்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதமாக இருந்தது. இந்த அளவு இப்போது மேலும் உயா்ந்துள்ளது. மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்தில் கொண்டு, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரிய அளவிலான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியன அமைந்துள்ளன. இவை நகரங்கள், பெருநகரங்களின் நுழைவாயிலாக மட்டுமின்றி, வருவாய் ஈட்டித் தரும் பன்னாட்டு நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்கள் ஏராளமானோா் அருகிலுள்ள நகா்ப்புற பகுதிகளிலும், அதைச் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்வதற்கும், திட்டமிட்ட வளா்ச்சிக்கும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது. இதன்மூலம் தொடா்புடைய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாநகராட்சிகள்?

நகரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் 16 மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநகராட்சிகளின் விவரம்:

கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், ஒசூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஆவடி, பெருநகர சென்னை மாநகராட்சி, கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகாசி.

Leave A Reply

Your email address will not be published.