புத்தாண்டு கொண்டாடுவதாக பொதுமக்களுக்கு இடையூறுக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை. திருச்சி போலீஸ் கமிஷனர்.
இன்று கூடுதல் போலீசார் வாகன தணிக்கை:
புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி
இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை.
புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி இரவு, பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை ) நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறக்கவுள்ளது. இதனையடுத்து இரவு நேரத்தில் பொதுமக்களிடம் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லிக்கொண்டு இடையூறு செய்வது, கிண்டல் செய்வது, கூச்சலிடுவது, வாகனங்களில் வேகமாக செல்வது, பொது இடங்களில் கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபடுவோர் மீது ரோந்துப்பணியில் உள்ள போலீஸார் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி மாநகரில் அனைத்து காவல் நிலையப் பகுதிகளிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரோந்து பணியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடவுள்ளனர்.
மேலும் மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள 9 சோதனைச் சாவடிகளிலும், கூடுதலாக போலீஸார் தீவிர வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். வாகன சாகஸங்களில் ஈடுபடுவது, வேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.