மணல் கடத்தலில் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என சிவகிரி போலீஸ் ஒருவரின் குற்றச்சாட்டுக்கு, தென்காசி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி காவல்நிலைய முதல்நிலைக் காவலராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக டிஜிபிக்கு இவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், ‘வெறும் கம்ப்யூட்டர் பில்களை மட்டும் வைத்துக் கொண்டு, கனிம வளங்களைக் கொள்ளையடித்து வருவதை நான் கண்டுபிடித்தேன்.
அப்படி, மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றால், அங்குள்ள உயர் அதிகாரிகள், போலி ரசீதுகளைத் தயார் செய்து, சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவிக்கின்றனர். மேலும், கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களைப் பறிமுதல் செய்துச் செல்லும் போது, காவல் ஆய்வாளர் முன்பே கொள்ளை கும்பல் என்னை மிரட்டி, வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர்.
இத்தகைய மணல் மாஃபியாக்களுக்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகள், லஞ்சம் வாங்கி குவித்துள்ளனர். கனிம வளக்கொள்ளை அதிகம் நடக்கும் சிவகிரியில் உயிருக்கு அச்சுறுத்தலோடு என்னல் பணியாற்ற முடியாது. எனவே, என்னை போலீஸ் பணியில் இருந்து விடுவிக்க ஓருகிறேன்.

இதனிடையே, மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்த மறுநாளே, எனக்கு வேறு பணி கொடுக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் உள்பட காவல் உயர் அதிகாரிகள், கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் வாகனங்களை கடத்திச் சென்ற விக்னேஷ் பி.எல்.ஆர் மற்றும் தாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் மீது வன்முறை தாக்குதலோ, வாகனத் தாக்குதலோ நடந்தால், அதற்கு முழுக் காரணம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், சப்டிவிஷன் அதிகாரிகளும், மணல் மாஃபியாக்களுக்கும் தான்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கடிதம் வெளியாகி, நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
“தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும், முதல்நிலை காவலர் பிரபாகரன் என்பவர் பெயரில், கையொப்பமிடாத பணியிலிருந்து விடுவிக்க கோரும் மனுவும், தொலைக்காட்சிக்கு காணொளி வாயிலாக பேட்டி கொடுத்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவிவந்தது.
மேற்படி சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், (பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு) M.ரமேஷ் மூலம் விசாரணை மேற்கொண்டதில், சமூக வலைத்தளங்களில் மேற்படி காவலர் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும், மேலும், காவலர் கொடுத்த மனுவில் காவல் உயர் அதிகாரிகள் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களைச் சித்தரித்து எழுதியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேற்படி காவலர் பிரபாகரன், கடந்த 01.03.2023-ம் தேதி முதல் விட்டோடியாகி 04.10.2024ம் தேதி பணிக்கு அறிக்கை செய்துள்ளார். காவலர்கள் வெளிநாடு செல்வது குறித்து தவறான தகவல்களை வாட்ஸ்அப் சமூக வலைத்தளத்தில் பரப்பினார். மேற்கண்ட இரண்டு செயல்களுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னனியில் உயர் அதிகாரிகள் மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை சித்தரித்து, கையொப்பமிடாத மனுவை காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பியதாகவும், சமூக வலைத்தளங்களில் பேட்டி கொடுத்த வீடியோவையும் அனுப்பியுள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரியவருகிறது. எனினும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.