திருச்சி மாநகரின் மையப் பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் பால பணிகளை கண்டித்து திருச்சியில் வரும் 31ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தியும்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும் இருந்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தையும்; நிர்வாகத் திறனற்ற மக்கள் விரோத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும் கண்டித்து,
திருச்சி மாநகர் மாவட்டக் அதிமுக சார்பில் வருகிற 31ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையிலான, கடந்த 43 மாதகால விடியா திமுக ஆட்சியில் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், அரசு நிதிகள் சுயநலத்தோடு பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தியும், சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், திருச்சி மாநகரின் மையப் பகுதியில் உள்ள மாரீஸ் பாலத்தை அகற்றுவதற்காக, கடந்த மார்ச் மாதம் முதல் அப்பாலத்தின் மீதான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இன்றுவரை அந்தப் பாலம் அகற்றப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல், திருச்சி ஜங்ஷன் அருகில் அமைந்துள்ள மற்றொரு பாலமும் அகற்றப்பட்டுவிட்டது.
மேலும், தென்னூர் மேம்பாலத்தையும் சீரமைப்பதற்காக மூடப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. இவ்வாறு, மக்கள் பயன்பாட்டில் உள்ள முக்கியமான பாலங்கள் மூடப்பட்டும், ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதாலும், ஏற்கெனவே கடும் வாகனப் போக்குவரத்து நெரிசலால் மேலும் இப்பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் என்று வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவரும் 3 முதல் 5 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இவ்வாறாக, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தி உள்ள மக்கள் விரோத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், 31.12.2024 செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், தலைமையிலும்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசையும்; திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அது அறிக்கையில் கூறியுள்ளார் குறிப்பிட்டுள்ளார்.