Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நெல்லை: நீதிமன்ற வளாகத்தில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி சிதைத்த கும்பல். இன்று காலை நடந்த பயங்கரம்.

0

'- Advertisement -

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே வர முயன்ற இளைஞரை அவரைக் கொல்வதற்காகக் காத்திருந்த கும்பல் அரிவாளுடன் விரட்டியுள்ளது.

உயிர்பிழைக்க தப்பி ஓடிய அவரை அக்கும்பல் வெட்டி சாய்த்தது.

நெல்லை மாவட்டத்தில் நீதிமன்ற அலுவல் தொடங்க இருந்த காலை நேரத்தில் வழக்கறிஞர்களும், குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு காவல்துறையினரும் வந்து கொண்டிருந்தனர்.

குற்ற வழக்குகளில் ஆஜராக இருப்பவர்கள் மற்றும் சாட்சி சொல்ல வேண்டியவர்களும் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், இளைஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்தார். அவரை எதிர்பார்த்து காத்திருந்தது போல் ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் வீச்சருவாளுடன் அவரை விரட்டியது.

தன்னைக் கொல்ல வருபவர்களை அடையாளம் கண்டு கொண்ட அந்த இளைஞர் உயிர் தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடியுள்ளார். ஆனால் அவரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்ற அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. நிலை குலைந்த அவர் தரையில் சரிந்து விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடையாத அந்த கும்பல் அவரது கழுத்து, முகம், தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி சிதைத்தது. அத்துடன் கையையும் காலையும் வெட்டி துண்டாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி தப்பிச் சென்றது.

நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தை கண்டு பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

சம்பவம் குறித்து அறிந்ததும் நெல்லை மாநகர காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும், குற்ற வழக்குகளில் ஆஜராக வரும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே அரிவாளுடன் குற்றவாளிகள் வந்ததை காவல் துறையினர் கண்டும் அங்கு நடந்த கொலையை தடுக்கத் தவறி விட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள். அதை கண்டித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலையானவர் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பது தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு காரணம் பழிவாங்கல் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2023 ஆகஸ்ட் 16-ம் தேதி கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ராஜாமணி என்பவரை சிலர் வெட்டிக் கொலை செய்தனர். அந்த கொலை சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்கில், இந்த கொலையை செய்திருக்கலாம். ராஜாமணி கொலையில் மாயாண்டிக்கு தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மாயாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சாதிய பின்புலத்தில் இந்த கொலை நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.