திருச்சியில் போலீசாரிஅதிரடி வேட்டையில் 11 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்.
தாய், மகன் தலைமறைவு.
திருச்சியில் போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்கவும் அவற்றை விநியோகிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகர காவல் ஆணையர் என். காமினி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே ரெட்டை மலை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திருச்சி மாநகர மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் நேற்று வெள்ளிக்கிழமை அப்பகுதியில், மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது ரெட்டைமலை அருகே இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தார். அவரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டதில், அவர் திருச்சி, ராம்ஜிநகரைச் சேர்ந்த அ. விக்னேஷ் (வயது 35) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மேற்கொண்ட விசாரணையில், ராம்ஜிநகரைச் சேர்ந்த சக்திவேல் மனைவி பிரேமா, மகன் விஸ்வநாதன் ஆகியோருக்கும் இதில் தொடர்பிருப்பதும், அவர்கள் தலைமறைவானதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.