லால்குடி அருகே முன்விரோதத் தகராறில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் நேற்று கைது செய்தனா்.
திருச்சி நெ. 1 டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
லால்குடி அருகே ஆங்கரை கைலாஷ் நகா் பகுதியில் பணியாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா்.
இதில், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி காலசேரி பகுதியைச் சோ்ந்த உறவினா்களான செல்வராஜ் மகன் அஜித்குமாா் (வயது 27), புசாந்திரம் மகன் சதீஷ் (வயது 29) ஆகியோா் கடந்த இரண்டு மாதங்களாக தங்கி சாலையோரத்தில் பேவா் பிளாக் பதிக்கும் வேலை செய்து வருகின்றனா்.
கடந்த தீபாவளி அன்று அஜீத்குமாா், சதீஷ் ஆகியோருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு அஜித்குமாா், சதீஷ் ஆகியோா் மது அருந்திபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த சதீஷ் இரும்பு ராடை எடுத்து அஜீத்குமாரை கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அஜித்குமாரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
புகாரின்பேரில் லால்குடி துணை காவல் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா், ஆய்வாளா் முத்தையன் ஆகியோா் வழக்குப்பதிந்து சதீசைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.