Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புத்தாநத்தம் அருகே நில அதிர்வு. காரணம் கல்வாரியில் பாறையில் உடைக்க வைத்த வெடி?மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்த கோரிக்கை.

0

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோவில்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

அப்போது வீட்டின் ஓடுகள், வீட்டில் இருந்த பாத்திரங்கள், ஜன்னல் கதவுகள் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக புத்தாநத்தம் பகுதியில் மதியம் 1.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டிலிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் வெளியே வந்தனர். இதுகுறித்து புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது: ‘புத்தாநத்தம் பகுதியில் மதியம் 1.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது.

பூமியே அதிர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. வீட்டு ஓடு, தகர கொட்டகை, ஜன்னல், பாத்திரங்கள் அதிர்ந்தன. இதுதொடர்பாக வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டபோது, மணப்பாறை, துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோல சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். எதனால் இந்த சத்தம் கேட்டது, நில அதிர்வா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும்’ என்றனர்.

மணப்பாறை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பகுதியில் மத்திய பயிற்சி கல்லூரி கோயம்புத்தூர் குருப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வெடிச்சத்தம் இங்கிருந்து வந்ததா என சந்தேகம் எழுந்த நிலையில், வீரப்பூர் அருகே உள்ள அணியாப்பூர் இரட்டைக் கரடு என்ற பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும் இங்கு அவ்வப்போது வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படும்போது பயங்கர சத்தம் ஏற்படுவதாகவும், அப்பகுதியில் தான் அதிக சத்தம் கேட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.

இந்த திடீர் வெடிச்சத்தம் கல்குவாரியிலிருந்து வந்ததா அல்லது துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து வந்ததா அல்லது நில அதிர்வா எனவும் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் அச்சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.