மாற்றுப் பாதை அமைக்கும் திட்டம் மாநகராட்சி கிடப்பில் உள்ளதால் ஏர்போர்ட் அருகே உள்ள பிரதான சாலை திடீரென மூடப்பட்டது .
திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள பழைய பாலம் திடீரென இடித்து அகற்றம்.
வயர்லெஸ் சாலையில் பிரதான பகுதி மூடப்பட்டது.
திருச்சி விமான நிலையம் அருகே, வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள பாலம் திடீரென பழுதானதால், இடிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சாலையின் பிரதான பகுதி மூடப்பட்டு மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்படுவதால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் சாலையின் குறுக்கே மழை நீர் வடிகால் வாய்க்கால் ஒன்று செல்கிறது. கடந்த காலங்களில் கட்டளை மேட்டு வாய்க்கால், குண்டூர், உடையான்பட்டி ஏரிகள், ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீரைக் கொண்ட பாசன வாய்க்காலாகவும், மேலும் அப்பகுதிகளில் வடியும் மழை நீர் வடிகாலாக இது இருந்து வந்தது.
தற்போது இப்பகுதியில் விளைநிலங்கள் அற்றுப்போய் குடியிருப்புகள் மட்டுமே உள்ளதால், இந்த வாய்க்கால் மழை நீர் வடிகாலா கவும் கழிவு நீர் வடிகாலாகவும் உள்ளது. இதன் மேல், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, இன்றளவும் போக்குவரத்துக்கு பயன்பட்டு வந்தது.
விமான நிலையத்துக்கும் சுப்பிரமணியபுரம் பகுதிக்கும் இடையே போக்குவரத்து நெருக்கடி, அல்லது முக்கிய பிரமுகர்கள் வருகை காலங்களில், புதுக்கோட்டை சாலை மற்றும் இப்பகுதியிலிருந்து செல்லும் வாகனங்கள் திருச்சி மாநகரை அடைவதற்கான மாற்று வழியாக வயர்லெஸ் சாலை திகழ்ந்ததால் இப்பாலத்தில், ஏராளமான கனரக வாகனங்கள் முதல் அனைத்து வகையான வாகனங்களும் சென்று வந்தன.
அண்மையில் வயர்லெஸ் சாலை ரூ. 6.04 கோடியில் விரிவாக்கம் மற்றும் மையத் தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அதுசமயம் இந்தப் பாலம் அகற்றப்படவில்லை. பழைய பாலம் எனத் தெரிந்தும், அதன் உறுதி குறித்து ஆய்வு செய்து, அந்த பாலத்தை அகற்றி புதுப்பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், அண்மையில் பாலத்தில் சென்ற குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டதையடுத்து அடுத்து அதைசீராக்கும் முயற்சியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வந்தனர். அப்போதுதான் பாலத்தில் பழுது ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அது மிகவும் முக்கியச்சாலை என்பதால், போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, பாதிப்பாலம் இடிக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக, மீதியிருந்த பாலப்பகுதியிலும் விரிசல் ஏற்பட்டது.
இதனால் வேறு வழியின்றி சனிக்கிழமை இரவு பாலம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை முதல், மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.
அந்த இடத்தில் உடனடியாக ரூ. 50 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் வயர்லெஸ் சாலையின், பிரதானப் பகுதி (விமான நிலையத்தின் எதிர்புறம்) மட்டும் மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து, பாலப்பணிகள் நடந்து வருவது குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மாற்று வழியில் செல்வோர், சற்று தள்ளி புதிய விமான நிலைய முனையத்தின் நுழைவாயில் பகுதி எதிர்புறம் உள்ள ஸ்ரீராம் திருமண மஹாலை ஒட்டிச்செல்லும் விஎம்டி சாலை வழியாக செல்ல முடியும். அதில் சிறிது தொலைவு சென்று வயர்லெஸ் சாலையை அடையமுடியும். இதில், இலகு ரக வாகனங்கள் சென்று வரமுடிகின்றன. ஆனால் பேருந்து போக்குவரத்து மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து இப்போதைக்குகேள்விக் குறியாகிவிட்டது. வயர்லெஸ் சாலையில், நகரப் பேருந்துகள் தவிர தினசரி 25 க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்துகள், ஸ்டாப் பஸ் எனப்படும் நிறுவன பணியாளர்களை ஏற்றிச்செல்லும் நிறுவன பேருந்துகள், பள்ளி வேன்கள் இயக்கப்படுகின்றன. அவை செல்வதில் தற்போது சிக்கல் நீடித்துள்ளது.
வயர்லெஸ் சாலைக்கு நிரந்தர மாற்று வழியாகவும், விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகர், அண்ணாநகர், அம்பிகை நகர், பாரதி நகர் உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட நகர்களுக்கு செல்லும் வழியாகவும் மேலும் கே.கே. நகர் பகுதியை அடைந்து மன்னார்புரம் செல்லும் மாற்றுப்பாதை அமைக்க கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழைய விமான நிலையம் எதிரே உள்ள விமான நிலைய குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள டி மார்ட் இடையில் செல்லும் சாலையை அகலப்படுத்தி காமராஜர் நகர் செல்லும் வகையில் நிரந்தர மாற்றுப்பாதை அமைக்கும் திட்டம் மாநகராட்சியில் கிடப்பில் உள்ளது. டி மார்ட் அருகே செல்லும் (இதே) வாய்க்காலின் மேல் ஒரு பாலம் அமைத்தால் மாற்றுப்பாதை எளிதாகும். இப்பாதையை ஏற்கெனவே அமைந்திருந்தால் தற்போது வயர்லெஸ் சாலைக்கான மாற்றுப்பாதையாக இது அமைந்திருக்கும் என்கின்றனர் அப்பகுதியினர்.