வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்.
திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஈ.பி.ரோட்டில் வளையல், விளையாட்டு பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர், தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் சென்று இருந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 கிராம் தங்கம், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருந்தன.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் மாரியப்பன் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் சிந்துநதி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் ரேகைகள் சேகரிக்கப்பட்டது.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அதுவும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.