தீபாவளியை முன்னிட்டு இன்று விராலிமலையில் நடைபெற்ற சந்தையில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஆடு கோழிகள் விற்பனை.
தீபாவளி நெருங்குவதால் விராலிமலையில் இன்று(திங்கட்கிழமை )காலை கூடிய ஆடு, கோழி சந்தை களை கட்டியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை அதிகாலை நடைபெறும் ஆடு மற்றும் கோழி சந்தை வழக்கம்போல் இன்று அதிகாலை தொடங்கியது.
ஆடுகளை வாங்க சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை விராலிமலை வந்து தங்கி இருந்து அதிகாலை நடைபெற்ற ஆடு சந்தையில் ஆடுகளை வாங்கி லோடு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
வாரம்தோறும் வழக்கம் போல திங்கட்கிழமை நடைபெறும் ஆடு சந்தை என்றாலும், இன்று நடைபெற்ற ஆடு சந்தை கூடுதல் கவனம் பெறுகிறது.
காரணம், தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நடைபெறும் சந்தை என்பதால் அதிக அளவில் ஆடு, கோழிகள் விற்பனைக்கு வந்தன.
இதில் 5 கிலோ எடை கொண்ட ஆடு 5000 முதல் 6000 வரையும் 8 கிலோ கொண்ட ஆடு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும், 10 கிலோ கொண்ட ஆடு 12,000 முதல் 13 ஆயிரம் வரையிலும் விலை நிர்ணயம் செய்து கால்நடை வளர்ப்போர் வியாபாரிகளிடம் கூறிய போதும் ஆடுகள் வரத்து அதிகம் இருந்ததால் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்டினார்.
இதனால் கால்நடை வளர்ப்போர் நினைத்த விலைக்கு விற்க முடியாமல் தவித்தனர். இருப்பினும் ஆடுகளை விற்க கொண்டு வந்து விட்டு திரும்பி ஆடுகளை கொண்டு செல்ல மனமில்லாமல் சற்று குறைவான விலைக்கு( ஒரு கிலோ 900 கணக்கில்)கால்நடை வளர்ப்போர் விற்று சென்றனர். தீபாவளி நெருங்குவதால் தீபாவளியன்று இறைச்சி கடை வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
நல்ல விலை கிடைக்காததால் ஆடுகளை விற்க வந்த கால்நடை வளர்ப்போர் அதிருப்தி அடைந்தனர். இதேபோல் கிலோ 400 விலையில் ஆயிரக்கணக்கான கோழிகள் விற்றுத் தீர்ந்தன. அதிகாலை முதல் நடைபெற்று வரும் ஆடு, கோழி சந்தையில் 7.30 மணி வரை சுமார் 3 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது.