விழுப்புரம் நகராட்சியில் தொழிலாளர்களின் சேமநலநிதி ரூ.8 கோடியை மோசடி செய்ததாக அதிமுக இளைஞர் பாசறை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 3 சொகுசு கார்கள், மினிவேன், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றுபவர்களின் குடும்ப சேமநலநிதியை (பிஎப்தொகை) கருவூலத்தில் செலுத்தாமல் சுருட்டியதாக அங்கு தற்காலிக ஊழியராக(ஊதியம் பெறாமல்) பணியாற்றிய விழுப்புரம் மருதூரை சேர்ந்த வினித்(24) மீது புகார் கூறப்பட்டது.
அதிமுக இளைஞர் பாசறை இணை செயலாளரான வினித், 2021 முதல் பல்வேறு பெயர்களில் நகராட்சி ஆணையரின் ஒப்புதல் பெறாத பதிவேடுகள் மூலம் நகராட்சிக்கு தொடர்பு இல்லாத வங்கி கணக்குகளுக்கு ரூ.8,01,38,245 பதிவேற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக அதேபகுதியை சேர்ந்த வளர்மதி, பனங்குப்பம் அஜித்குமார் ஆகியோரும் இருந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் 3 பேர்மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வினித்தை பிடித்து போலீசார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் இருந்து 3 சொகுசு கார்கள், ஒரு மினிவேன், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். பின்னர் வினித்தை கைது செய்து விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
* அதிமுகவில் இருந்து நீக்கம் எடப்பாடி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில், கட்சி கொள்கை-குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விழுப்புரம் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆர்.வினித், அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
* மோசடி பணத்தில் கல்வி நிறுவனங்களை தொடங்கியது அம்பலம்
விழுப்புரம் நகராட்சியில் சேம நலநிதி மோசடியில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி வினித் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் பல லட்சங்களை குவித்துள்ளாராம். மேலும் சமூகத்தில் தனது பெயரை தக்க வைக்க கல்வி தொடர்பாக நிறுவனங்களை தொடங்கி கல்வி நிறுவன கொடை வள்ளல் என்ற பட்டத்தை தானே உருவாக்கி உள்ளார். மாநில, ஒன்றிய அரசின் அரசு போட்டித் தேர்வுகளுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையத்தை ஏற்படுத்திய அவர் சலுகை கட்டணத்தில் பயிற்சி நடத்தி வந்துள்ளார்.
மேலும் கல்வி உலகம் என்ற நூலகத்தை திறந்து குறைந்த விலையில் பொது அறிவு சம்பந்தமான புத்தகத்தை விற்பனை செய்து வந்த வினித், டைப்பிங் சென்டர் மற்றும் மகளிருக்கு குறைந்த விலையில் அழகுப் பொருட்கள் விற்பனை நிலையத்தையும் துவங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் கோச்சிங் சென்டர், டைப்பிங் சென்டர், பிரின்டிங் ஆப்செட் என 14 நிறுவனங்களை துவங்கி அதன் மூலம் பல லகரங்களையும் குவித்துள்ளது குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் விழுப்புரம் நகரில் முக்கிய அதிமுக பிரமுகர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.