நவராத்திரி விழாவை முன்னிட்டு திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் பூஜை. பெண் அகோரிகளும் பங்கேற்பு.
நவராத்திரி விழா நேற்று தொடங்கிய நிலையில் திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் பூஜை.
தங்கள் உடல் முழுவதும் திருநீற்றை பூசிக் கொண்டு அகோரிகள் காட்சியளித்தனர்.
நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இந்த விழா 9 நாட்களுக்கு நடைபெறும். பிறகு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையுடன் இந்த விழா முடிவுக்கு வரும். நவராத்திரியையொட்டி பெரும்பாலானோர் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் கொலு வைத்திருப்பார்கள். அது போல் கோயில்களிலும் கொலு வைப்பதுண்டு.
கொலு வைப்பதற்கென சில விதிகள் உள்ளன. ஒற்றை படையில் படிகளை கொண்டு அமைக்கப்படும் கொலுவில் முதல் படியில் என்ன இருக்க வேண்டும். அடுத்த படியில் என்ன இருக்க வேண்டும். ராகவேந்திரா, ஷீரடி சாய்பாபா உள்ளிட்டோரின் சிலைகளை எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிந்து கொண்டு கொலு வைக்க வேண்டும்.
இந்த நிலையில் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இந்த கோயிலில் காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகளை செய்து கோயிலையும் நிர்வகித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் விசேஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழபாடுகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையடுத்து முதல் நாளான நேற்று இரவு அகோரி காளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தார். இதையடுத்து நள்ளிரவில் சுமார் 15 அகோரிகள் தங்கள் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு சிறப்பு யாகங்களை செய்தனர். இது பெண் அகோரிகளும் பங்கு பெற்றனர்.
அப்போது மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்தார். பிறகு நவதானியங்கள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாக பூஜை செய்திருந்தார். அப்போது மற்ற அகோரிகள் சங்குகளை முழங்கினர். பிறகு ஜெய் கோர காளி, ஜெய் அஷ்ட கால பைரவர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜைகளையும் மகாதீபாராதனைகளும் செய்யப்பட்டது.
காசியிலும் நேபாளத்திலும் அகோரிகள் அதிக அளவில் காணப்படுகிறார்கள். இவர்கள் மண்டை ஓடுகளை வைத்தும் பூஜை செய்கிறார்கள் என சொல்லப்படுகிறது. மிருகங்களை பலி கொடுத்து, இறந்த மனிதர்களின் மாமிசத்தை உண்பார்கள். இவர்களின் வழிபாடுகளை பார்க்கும் போது சற்று அச்சமாகவே இருக்கும். இவர்களின் வசிப்பிடமே மயானம்தான்.
அகோரிகள் என்பவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். இவர்கள் மயானத்தில் உடல்களை எரித்த சாம்பலை தங்கள் உடலில் பூசிக் கொள்வார்கள். இவர்கள் தனிமையிலேயே வாழ்வார்கள். கும்பமேளாவின் போது ஒன்றாக கூடுகிறார்கள்.