ஒரு கோடி ரூபாய் வீட்டை ரூ.25 லட்சத்திற்கு கேட்டு மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநகராட்சி துணை மேயர் உள்பட 5 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு .
1 கோடி ரூபாய் வீட்டை 25 லட்சத்துக்கு எழுதிக் கேட்டு மூதாட்டியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்து வருபவர் வசந்தா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கோழிக்குமார் என்பவரிடம் வீட்டை அடமானமாக வைத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில், 10 லட்சம் ரூபாய் கடனை அடைத்து விடுகிறேன். அடமானப் பத்திரத்தை ரத்து செய்து தருமாறு வசந்தா, குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு, நான் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் வீட்டை தனக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும் கோழிக்குமார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வீட்டை எழுதிக் கேட்டு மிரட்டி தாக்கியதாக கோழிக்குமார், கணேசன், முத்து ஆகிய 3 பேர் மீதும் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் வசந்தா மே 7 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், மூன்று பேர் மீதும் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மதுரை துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன், முத்து ஆகியோர் கோழி குமாருக்கு ஆதரவாக வந்து வீட்டை எழுதிக் கேட்டும், முந்தைய வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும் காவல்துறையில் வசந்தா தரப்பில் ஜூலை 30 ஆம் தேதியன்று புகார் செய்யப்பட்டது.
மேலும், பொது இடத்தில் கற்களைக் கொண்டு அவர்கள் தாக்க முயன்றதாகவும், ஜாதி ரீதியாக ஆபாசமாக பேசியபோது எங்களுடைய மகள் பொது இடத்தில் ஆபாசமாக திட்டாதீர்கள் என கூறியதற்கு துணை மேயர் நாகராஜன் அவருடைய பாதுகாப்புக்கு வந்த போலீஸிடம், இவங்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளு என்று கூறி மிரட்டியதாகவும் புகார் அளித்திருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல், வசந்தா, அவருடைய மகன் முருகானந்தம் ஆகியோரிடம் இருதரப்பிலும் சமாதானம் ஆனதுபோல ஆகஸ்ட் 5 ஆம் தேதி காவல் நிலையத்தில் எழுதி வாங்கினர். எங்களுடைய வீட்டை எழுதி வாங்குவதற்கு தொடர்ந்து மிரட்டும் கோழி குமாரின் ஆதரவாளர்களான துணை மேயர் நாகராஜன், அவருடைய தம்பி ராஜேந்திரன், முத்து ஆகியோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சிசிடிவி ஆதாரங்களுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை மாவட்ட குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன், கோழிகுமார், முத்துச்சாமி, முத்து ஆகிய 5 பேர் மீது சட்ட விரோதமான கும்பலில் உறுப்பினராக இருப்பது, பொது இடத்தில் ஆபாச சொற்கள் பயன்படுத்தியது, வீட்டுக்குள் புகுந்து அத்துமீறல் குற்றம் செய்தல், தன்னிச்சையாக காயம் விளைவித்தல், மரணம் விளைவிப்பதாக மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 6 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.