இன்று ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொருவரின் கைகளில் கிடைத்த வரமாக மாறிவிட்டது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வயது வரம்பின்றி அவர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி நேரத்தை செலவிடுகிறார்கள்.
முன்பெல்லாம் இளைஞர்கள் வீட்டில் இருந்து வெளியே சென்று விளையாடி வந்தனர். அவர்களை பெற்றோர் வீதிவீதியாக, காடு-மேடாக தேடித்திரிவார்கள். ஆனால், இன்றளவில் வீட்டிற்குள் செல்போனும் கையுமாக சிறார்கள் முடக்கிக்கிடக்கும் நிலையில், அவர்களை வற்புறுத்தி விளையாட வெளியே அனுப்பும் சூழலுக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
இதனிடையே, தாய் ஒருவர் மகனிடம் செல்போனை கீழே வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டிக்கிறார். அதனை பொருட்படுத்தாத மகன் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாட முயல்கிறார். ஒருகட்டத்தில் தாய் செல்போனை கீழே வைக்க செய்கிறார்.
பின் மகன் பாடப்புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டு இருந்த நிலையில், தாய் தனது குடும்பத்தினரிடம் செல்போனில் பேசிவிட்டு, மீண்டும் அதனை கீழே வைத்துள்ளார். இதனால் சிறுவன் செல்போனை எடுக்க ஆவலாகி, தாயை கிரிக்கெட் மட்டையால் பலமாக அடித்து, பின் செல்போனை எடுத்து கேம் விளையாடுகிறார்.
இந்த காணொளி காட்சிகள் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டு வைரலாகி வரும் நிலையில், அதனை பகிரும் பலரும் சிறார்கள் செல்போனுக்கு அடிமையாகவதால் ஏற்படும் விபரீதம் போதைப்பொருளுக்கு சமமானது என கவலை தெரிவிக்கின்றனர்.