கோழி ஒன்று அரசனின் பட்டத்து யானையின் தலைமீது மோதி வென்ற “கோழியூர்’ வரலாற்றை எடுத்துரைக்கும் செப்புக்காசு.
கோழி ஒன்று அரசனின் பட்டத்து யானையின் தலைமீது மோதி வென்ற “கோழியூர்’ வரலாற்றை எடுத்துரைக்கும் செப்புக்காசு.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள் நாணயங்கள் தபால் தலைகள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் செயலர் குணசேகரன் பொருளாளர் அப்துல் அஜீஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன் முகமது சுபேர் சந்திரசேகரன் கமலக்கண்ணன் அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
கண்காட்சியில்,
கோழி ஒன்று அரசனின் பட்டத்து யானையின் தலைமீது மோதி வென்ற “கோழியூர்’ வரலாற்றை எடுத்துரைக்கும் செப்புக்காசு குறித்து முகமது சுபேர் பேசுகையில்,
காவிரி – கொள்ளிடம் ஆறுகள் பாய்ந்து வளப்படுத்தும் திருச்சியின் வரலாற்று சிறப்பு மிக்க உறையூர் சங்க கால சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கியதை வரலாற்றுக் குறிப்புகள், தொல்லியல் சான்றுகளால் அறியமுடிகிறது.சங்க இலக்கியங்களில் உறையூர் பற்றிய செய்திகள் விரிவாகக் காணப்படுகின்றன. அகநானூறு, புறநானூறு, சிறு பாணற்றுப்படை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய இலக்கியங்களில் இவ்வூர் “உறையூர்’ எனக் குறிப்பிடப்படுவதைத் காணலாம். இவ்வூர் பேரியாறு (காவிரி) ஆற்றின் கரையில் அமைந்திருப்பதையும், இவ்வூருக்கு கிழக்கே நெடும்பெரியங்குன்றம் (திருச்சி மலைக்கோட்டை)மலை அமைந்திருப்பதையும் அகநானூறு கூறுகிறது. “காவிரிப்படப்பை’ உறந்தை, அன்ன பொன்னுடை நெடு நகர் (அகம் – 385) உறையூர் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது.
தாலமியின் நூலில் (ழுசவாரசய) ஓர்த்தூரா என்றும், அர்கறு என்றும் கூறப்படுகிறது. இங்கிருந்து முத்துகளும் வாங்கப்படுவதாக அந்நூலில் செய்தி காணப்படுகிறது. கிரேக்கர்களால் “ஆர்கரிடிக்’ என அழைக்கப்பட்ட உறையூரின் மஸ்லின் துணி (மென்பருத்தித் துணி) உலகின் மிகச் சிறந்த துணியாகக் கருதப்பட்டது. அயல்நாடு வணிகம் மூலமாக சோழ நாட்டுக்குப் பெரும் பொருள் கிடைத்தது. இன்றும் உறையூர் கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. மேலும் இவ்வூர் “உரகபுரம்’ எனவும் அழைக்கப்படுகிறது. சோழர்கால காசுகளில் “உரக’ என்ற பெயர் இடம் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்தில் இவ்வூர் “உறையூர்”, “வாரணம்”, “கோழியூட்’ என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. கோழி ஒன்று அரசனின் பட்டத்து யானையின் தலைமீது மோதி வென்ற காரணத்தால் “கோழியூர்’ எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
இச்சிறப்பு மிக்க நிகழ்வு செப்புக்காசில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு உறையூர், பஞ்சவர்ண சுவாமி கோயில் கருவறையின் சுவரில் சிற்ப வடிவில் காணப்படுகிறது.
உறையூரைத் தலைநகராக் கொண்டு அரசாட்சி செய்த அரசர்களுள் தித்தன், நெடுங்கிள்ளி, கரிகாலன், கோப்பெருஞ் சோழன், கிள்ளி வளவன், பெருநற்கிள்ளி என்போர் புகழ் பெற்று விளங்குகின்றனர்.
உறையூர் இளம் பொன் வாணிகனார் உறையூர் ஏணிச் சேரி முடமோசியா, உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் சல்லியன் குமாரனார், உறையூர் சிறு கந்தனார், உறையூர் பல்காயனார், உறையூர் கதுவாய்ச் சாத்தனார், உறையூர் முதுகொற்றனார், கோழிக் கொற்றனார் போன்ற புலவர்கள் இயற்றிய பாடல்களிளிருந்து சோழ மன்னர்களின் வீரம், கொடை, நகரவளம் போன்றவைகளின் சிறப்புகளை அறியமுடிகிறது.
சோழ மன்னர்கள் ஐந்து நகரங்களை முடிசூடிக்கொள்ளும் இடங்களைக் கொண்டிருந்தனர். அதில் ஒன்றாக “உறையூர்’ சிறப்புப் பெற்று விளங்கியது என சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் இடம்ற்றுள்ளது.
மேலும், கோச் செங்கட் சோழனும், புகழ்ச் சோழ நாயனாரும் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் ஆவர்.
பூம்புகாரிலிருந்து புறப்பட்ட கோவலனும், கண்ணகி மற்றும் கவுந்தி அடிகள் மூவரும் நடந்துவந்து காவிரிக் கரையைக் கடந்து வந்து உறையூரை அடைந்து அங்கு தங்கி பின்னர் மதுரை சென்றதாக (புகார்க்காண்டம் – நாடுகாண் காதை) சிலப்பதிகாரம் கூறுகிறது.
பிற்கால சோழர் காலத்திலும் உறையூர் சிறப்புப் பெற்று விளங்குகிறது. உறையூரில் உள்ள முக்கீச்சரம் (பஞ்சவர்ண சுவாமி கோயில்) திருமங்கை ஆழ்வாரும் திருப்பாணாழ்வாரும் போற்றிய அழகிய மணவாளர் – கமலவல்லி நாச்சியார் எழுந்தருளி அருள்புரியும் அழகியமணவாளர் கோயில், வரலாற்றுச் சிறப்பு பெற்ற தலமாக விளங்கும் தான்தோன்றீசுவரர் கோயில், சக்தி வழிபாட்டின் பெருமையை எடுத்துக்கூறும் உறையூர் வெக்காளி அம்மன் கோயில் போன்றவை உறையூருக்கு பெருமை சேர்க்கின்றன.சோழர் கால கல்வெட்டுகளில் கேரளாந்தக வளநாடு, இராஜகம்பீர வளநாடு, ராஜ மகேந்திர வளநாடு போன்ற வளநாடுகள் அமைக்கப்பட்டபொழுது, அவற்றின் கீழ் உறையூர் கூற்றம் இடம் பெற்றது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்கள், போசள மன்னர்கள் ஆட்சியின் கீழ் உறையூர் இருந்து வந்துள்ளது. பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1235) உறையூறையும் – தஞ்சையையும் வெஞ்சினம் கொண்டு தீக்கிரையாக்கினான் என்ற செய்தியையும் திருக்கோயிலூர் கல்வெட்டால் அறிகிறோம்.
தலபுராணங்களும் உறையூரின் வரலாற்றை எடுத்துக் கூறுகின்றன.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை “உறையூர்ப்புராணம்’ என்ற தலபுராணத்தை இயற்றியருளினார்கள். அதே போன்று திரிசிராமலையில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவர் பற்றி புலவர் சைவ எல்லப்ப நாவலர் அவர்கள் “செவ்வந்திப்புராணம்’ என்ற நூலையும் இயற்றியருளினார்கள்.
சோழர் வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்கும் உறையூரில் 1964-65 முதல் 1969-ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழக பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.
தொன்மைச்சிறப்பு மிக்க கறுப்பு – சிவப்பு நிறமுடைய பானை ஓடுகள், பூச்சுப் பூசப்பெற்ற பானை ஓடுகள், சுடுமண் மணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்புப் பொருள்கள், சங்கினால் ஆன பொருள்கள், ரோமானிய நாட்டு பானை ஓடுகள், பண்டைய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், குறியீடுகள் உள்ள பானை ஓடுகள் போன்றவை கிடைத்தன.
செவ்வக வடிவிலான தொட்டி 7 வரிசை செங்கற்களால் கட்டப்பட்டது. உறையூர் நெசவுத் தொழிலில் புகழ் பெற்று விளங்கியது. அதற்கு சான்றாக உறையூர் அகழ்வாராய்ச்சியில் செங்கல்லால் ஆன சாயத் தொட்டி வெளிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய குறிப்புகளாலும், தொல்லியல் ஆய்வில் கிடைத்த சான்றுகளாலும் இவ்வூர் “ஊர் எனப்படுவது உறையூர்’ எனப் போற்றப்படுகிறது என்றார்.
நிகழ்வில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட நாணயங்கள் சேகரிப்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்று நாணயங்கள் வரலாற்றினை எடுத்துரைத்தனர்.