திருச்சி ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்.
திருச்சி எடத்தெரு ரோடு, பிள்ளைமாநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் அமைந்துள்ள காவல் தெய்வம் ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஶ்ரீ வெள்ளையம்மாள், ஶ்ரீ பொம்மியம்மாள், ஶ்ரீ மஹா மாரியம்மன், ஶ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாகசால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றைய தினம் மங்கள இசை, கணபதி பூஜை, தனபூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், வேதிகா அர்ச்சனை, வேத பாராயணம், மஹா பூர்ணாஹுதியை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
இன்று காலை அனைத்து தெய்வங்களுக்கும் காப்பு காட்டுதல், மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனையை தொடர்ந்து மேலதாள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணியினர், கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.