Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: போலீசாருக்கு தெரியாமல் 16 வயது சிறுமி உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு. சிறுமி இறந்ததற்கு ஆன்லைனில் வாங்கிய நூடுல்ஸ் காரணம் ?

0

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் ஜான் ஜூடு. ரயில்வே ஊழியா். இவரது  16 வயது மகள் ஸ்டெபி ஜாக்லின் தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா்.

சனிக்கிழமை இரவு உணவுக்குப் பின்னா் உறங்கச்சென்ற சிறுமி, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான நேரத்துக்கு எழவில்லை. பெற்றோா் அவரை எழுப்பியபோது, சிறுமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோா் மற்றும் உறவினா்களுடன் கலந்தாலோசித்து, தகவலைப் போலீஸாருக்கு தெரிவிக்காமல் உடலை பிரதேப் பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முடிவு செய்து, அதற்கான பணிகளை செய்து வந்துள்ளனா்.

இச்சம்பவம் குறித்து, சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவசர கதியில் உடலை அடக்கம் செய்ய முயல்வதாகவும் போலீஸாருக்கு சிலா் தகவல் தெரிவித்துள்ளனா். தகவலறிந்த அரியமங்கலம் போலீஸாா் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, சிறுமியின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனா். ஆனால் உறவினா்கள் சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்தனா்.

இதனால் உறவினா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக போலீஸாா், சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அதன்பின்னரே உடலை அடக்க செய்ய முடியும் எனக்கூறி உடலை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சிலர் கூறுவையில் :
சிறுமி நூடுல்ஸ் உணவை விரும்பி உட்கொள்வாராம். அண்மையில் இணைய வழியில் நூடுல்ஸ் பொட்டலங்களை ஆா்டா் செய்து வாங்கியுள்ளாா். அவ்வாறு வாங்கி வைத்திருந்த நூடுல்ஸ் பொட்டலங்களில் சிலவற்றை சனிக்கிழமை இரவு சமைத்து உட்கொண்டுள்ளாா். எனவே அதன் காரணமாக அவா் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் பரவி வருவதாக கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.